பெருங்கதை/1 58 சயந்தி புக்கது
- பாடல் மூலம்
1 58 சயந்தி புக்கது
உதயணன் யானைமீதூர்ந்து செல்லல்
[தொகு]விற்றஃபடை சூழ விளங்குமணிப் பைம்பூண்
மறப்படை நோன்றாள் வத்தவர் பெருமகன்
போரகத் தெழுந்த பூசல் வினைஞர்
மார்பகம் போழ்தலி னீரந் தீரா
நெய்த்தோர்க் கச்சையி னித்திலம் போலச் 5
செம்மை சேர்ந்த வெண்மைய வாகிய
ஏந்தெழி லாகத் திறுவரைத் தாழ்ந்த
\பாந்த ளன்ன பரேலெறுழ்த் தடக்கையின்
மிதிதோற் கொல்லன் பொதியுலைச் செந்தீத்
தகர்வன போலச் சிதர்வன சிந்திப் 10
புகரணிந் தோங்கிய நெற்றிப் பூங்கவுள்
அயறசும் பிருந்த வந்த ணாற்றத்து
மதக்களி சுவைக்கு மணிநிறப் பறவைத்
தொகைத்தொழி லோப்புத் தகைச்செவிக் கேற்பப்
பணைத்த வெருத்திற் பைங்கட் செயிர்நோக் 15
கணைப்பக் கண்டத னணிநிழற் சீற்றத்து
நீல மால்வரை நிமிர்ந்துநடந் தன்ன
கோலக் குஞ்சரங் கொள்ளப் பண்ணிப்
பாகர் தருதலிற் பணையெருத் தேறிக்
கருமுகின் மருங்கி னிருளறுத் தேர்தரும் 20
வெம்மைச் செல்வன் மேனிலை பெற்ற
தண்மைத் திங்களிற் றகைக்குடை நிழற்ற
உதையண குமர னொளிபெறத் தோன்றப்
காவலர் முதலியோர் செயல்
[தொகு]புதைகுப் பாயத்துப் பூண்ட வாளிற்
கடுங்கட் காவலர் கொடுங்கோடு சிலைப்ப 25
எப்பான் மருங்கினு மொய்ப்புற்று விளங்கிக்
கிழியிடம் பெறாஅர் வழியிடம் பார்ப்ப
யானையும் புரவியுஞ் சேனையுஞ் செல்ல
விடற்கருந் தோழர் புடைக்களி றேற
அரும்பொருள்கள்
[தொகு]அந்தண் பொதியிற் சந்தன மரமும் 30
நறுந்தண் சோலை யிறுங்காற் றிவிசும்
அடவி விந்தத் தியானை மருப்பும்
வடதிசை மாமலைச் சுடர்விடு பொன்னும்
குடகடற் பிறந்த படர்கொடிப் பவழமும்
தென்திசைப் பிறந்த வெண்சுடர் மணியும் 35
விஞ்சையம் பெருமலை விளங்கொளி வெள்ளியும்
இலங்கை யீழத்துக் கலந்தரு செப்பும்
இமயத்துப் பிறந்த வயிரச் சாதியும்
கடாரத் திரும்பொடு கையகத் தடக்கி
பலநாட்டுக் கைத்தொழிலாளர்
[தொகு]யவனத் தச்சர் மவந்திக் கொல்லரும் 40
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்
தத்தங் கோண்மேற்றங் கைத்தொழி றோன்ற 45
வாசவதத்தைக்குரிய வண்டியின் உறுப்புக்கள்
[தொகு]ஆரமுஞ் சூட்டு நேர்துணைக் குழிசியும்
அச்சு மாணியும் வச்சிர யாப்பும்
அகவாய்க் கோடும் புறவாய்ப் பூணும்
பத்திரப் பந்தமுஞ் சித்திரப் புளகமும்
புறமணைப் பலகையு மகமணைத் தட்டும் 50
சந்திக்கோணமு மெந்திர வாணியும்
கஞ்சிகைக் கொளுவொடு கயிற்றுநிலை யமைத்து
மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ
முகத்தூ ணளவு மகத்தூ ணமைதியும்
நூலிட் டமைத்த கோலக் கூடத்து 55
நாண்மீ னொழுக்குங் கோண்மீன் கோப்பும்
கரந்துறை கோளொடு நிரந்தவை நிறீஇயவற்
றேழ்ச்சியு மிறுதியுஞ் சூழ்ச்சியு முணர
அரும்பொறி மண்டல மகவயி னியற்றிப்
புலமை யுணர்ந்து புலங்கெழு நுட்பத்துப் 60
பெரும்பொறிப் பாவை மருங்கி னிறீஇ
முடியு மடியு முறைமையிற் புனைந்து
கொடிய மலருங் கொள்வழி யெழுதிப்
பிடியுங் களிறும் பிறவு மின்னவை
வடிமாண் சோலையொடு வகைபெற வரைந்து 65
நயத்திறம் பொருந்த நாடகங் கண்டும்
விசித்திர வனப்பின் வீணை யெழீஇயும்
பொன்னு மணியும் பன்மலர்த் தாரும்
திருத்தி யணிந்து மருப்புநெய் பூசிச்
சேணெறி செல்லக் கோணெறி கொளுத்தி 70
வாசவதத்தை வையமேறல்
[தொகு]உலைவி லூர்ச்சி வலவன் காத்தலிற்
புதுத்துணை மகளி ரொதுக்குநடை யேத்தக்
காஞ்சன மாலை பூம்புறத் தசைஇ
மாசில் விண்ணவன் மடமகள் போல
வாசவ தத்தை வைய மேறக் 75
கோற்றொழி லாளர் மாற்றுமொழி யியம்பக்
கொடிபல நுடங்கக் குன்றஞ் சிலம்ப
இடியுறழ் முரசி னிருங்க ணெருக்கிக்
காட்டக மருங்கின் வீட்டிட மமைகெனப்
குடிகள் செயல்
[தொகு]பெருமலைச் சாரற் சீறூர் வாழும் 80
காலக் குறும்ப ரோலைத் தூதிற்
பெரும்பொறி யண்ண லரும்பொறி யொற்றிக்
குழிப்படு வேழக் கூன்மருப் பிரட்டையும்
வரைப்படு தேனுஞ் சினைப்படு கனியும்
வீணைத் தண்டும் வேய்படு முத்தும் 85
கானத் தகிலு மேனத் தெறியும்
பொறிப்புலித் தோலு மறுப்பிய லூகமும்
மந்திப் பிணையொடு மற்றவை பிறவும்
தந்திறை தந்து முந்துசிறைப் பட்ட
அற்ற காலத்து முற்ற நோக்கி 90
அடியுறை செய்தொழிற் குடிமுதல் பிழைத்தல்
இருநிலம் பெயரினு மெம்மாட் டிலவெனப்
பெருமகன் றமரொடு தெளிவனர் தேற்றி
உதயணனும் பிறரும் சயந்தியை அடைதல்
[தொகு]உழைப்படை யாப்பிற் புடைப்படை காப்ப
மிலைச்ச மன்னர் தலைப்படை யொட்ட 95
நற்படைத் தோழர் விற்படை பின்வரக்
கடல்கிளர்ந் தன்ன வடலருந் தானை
இறும்பம லடுக்கத்துக் குறும்புபல போகி
அரிலற லகவயி னாடுத லானா
வரியகட் டலவன் வள்ளுகி ருற்றெனக் 100
கன்னி வாளை யுண்ணா தொடுங்கும்
தண்பணை தழீஇய வண்பணை வளநா
டருமிளை யுடுத்த வமைவிற் குன்றாது
பெருமலை சூழ்ந்த வரிதிய லமைவோ
டிழிக்கப் படாஅ வெழிற்பொலி வெய்திப் 105
பெருமண் ணுவாவும் பேராப் பல்படை
உருமண் ணுவாவுக் குரிமையி னிருந்த
சயந்தியம் பெரும்பதி யமர்ந்துபுக் கனரால்
இயைந்த செம்மையொ டியைந்திசி னோரென்.
1 58 சயந்தி புக்கது முற்றிற்று.
முதலாவது உஞ்சைக் காண்டம் முற்றுப் பெற்றது.