பெருங்கதை/2 17 தேவியைப் பிரித்தது

விக்கிமூலம் இல் இருந்து
(2 17 தேவியைப் பிரித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

2 17 தேவியைப் பிரித்தது

யூகியின் செயல்[தொகு]

கழிக்குங் காலைக் கானத் தகவயின்
வழுக்கி றோழரொ டிழுக்கின் றெண்ணி
வந்தவ ணொடுங்கிய வெந்நிற லமைச்சன்
பொய்ந்நில மமைத்துப் புரிசைக் கோயில்
வெவ்வழ லுறீஇ விளங்கிழைப் பிரித்து 5
நலத்தகு சேதா நறுநெய்த் தீம்பால்
அலைத்துவாய்ப் பெய்யு மன்புடைத் தாயின்
இன்னா செய்து மன்னனை நிறூஉம்
கருமக் கடுக்க மொருமையி னாடி
உருமண் ணுவாவொடு வயந்தகற் குணர்த்தித் 10
தவமுது மகளைத் தக்கவை காட்டி
உயர்பெருங் கோயிலுட் டேவியை யொழியா
நிலாமணிக் கொடும்பூ ணெடுந்தகைக் குருசிலை
உலாவெழப் போக்கி யொள்ளழ லுறீஇயபின்
இன்னுழித் தம்மினென் றன்னுழி யவளொடு 15
பின்கூட் டமைவும் பிறவுங் கூறிக்
கன்கூட் டெய்திக் கரந்தன னிருப்ப

சாங்கியத்தாயின் செயல்[தொகு]

மந்திர நாவி னந்த ணாட்டி
தேருடை மன்னர் திறல்படக் கடந்த
போரடு குருசிலைப் பொழுதிற் சேர்ந்து 20
வரையுடைச் சாரலில் வரூஉங் குற்றத்
துரையுடை முதுமொழி யுரைத்தவற் குணர்த்தித்

சாங்கியத்தாய் உதயணனுக்குக் கூறல்[தொகு]

தோற்கை யெண்குங் கோற்கைக் குரங்கும்
மொசிவா யுழுவையும் பசிவாய் முசுவும்
வெருவு தனமைய வொருவயி னொருநாட் 25
கண்ணுறக் காணிற் கதுமென நடுங்கி
ஒண்ணுதன் மாத ருட்கலு முண்டாம்
பற்றா ருவப்பப் பனிவரைப் பழகுதல்
நற்றார் மார்ப நன்றியின் றாகும்
இன்னெயிற் புரிசை யிலாவா ணத்துநின் 30
பொன்னியல் கோயில் புகுவது பொருளென

உதயணன் இலாவாணம் சென்று இருத்தல்[தொகு]

உறுவரை மார்ப னுவந்தன னாகி
இறுவரை யிமயத் துயர்மிசை யிழிந்து
பன்முகம் பரப்பிப் பௌவம் புகூஉம்
நன்முகக் கங்கையி னகர நண்ணிப் 35
பன்மலர்க் கோதையைப் பற்றுவிட் டகலான்
சின்னாள் கழிந்த காலைச் சிறந்த

தோழர் உதயணனிடம் கூறுதல்[தொகு]

நன்மாண் டோழர் நண்ணுபு குறுகிச்
செய்வினை மடிந்தோர்ச் சேர்ந்துறை விலளே
மையறு தாமரை மலர்மக டானெனல் 40
வையகத் துயர்ந்தோர் வாய்மொழி யாதலின்
ஒன்னா மன்னர்க் கொற்றுப்புறப் படாமைப்
பன்னாட் பிரிந்து பசைந்துழிப் பழகாது
வருவது பொருளென வாசவ தத்தையைப்

உதயணன் மறுத்தலும் வாசவதத்தையின் கூற்றும்[தொகு]

பிரித லுள்ளம் பெருந்தகை மறுப்பத் 45
தாழிருங் கூந்தலைத் தணப்ப நின்றதோர்
ஊழ்வினை யுண்மையி னொளிவளைத் தோளியும்
வேட்டம் போகி யடிகள் காட்டகத்
தரும்பினு மலரினும் பெருஞ்செந் தளிரினும்
கண்ணி கட்டித் தம்மி னெனக்கென 50

உதயணன் வேட்டைக்குச் செல்லல்[தொகு]

வள்ளிதழ் நறுந்தார் வத்தவ மன்னனும்
உள்ளம் புரிந்தன னொள்ளிழை யொழியக்
கழிநாட் காலைக் கான நோக்கி
அடுப்போர் மாவூர்ந் தங்க ணீங்க

உதயணன் ஏவலாளர் வாசவதத்தையின் மாடத்திற்குத் தீ மூட்டல்[தொகு]

வடுநீங் கமைச்சர் வலித்தன ராகிப் 55
பிணைமலர்ப் படலைப் பிரச்சோ தனன்றன்
இணைமலர்ப் பாவையை யியைந்ததற் கொண்டும்
ஊக்க மிலனிவன் வேடகையின் வீழ்ந்தென
வீக்கங் காணார் வேட்டுவ ரெள்ளிக்
கலக்க மெய்தக் கட்டழ லுறீஇய 60
தலைக்கொண் டனரெனத் தமர்க்கும் பிறர்க்கும்
அறியக் கூறிய செறிவுடைச் செய்கை
வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
வன்கண் மள்ளர் வந்தழ லுறீஇப்
போர்ப்பறை யரவமொ டார்ப்பனர் வளைஇக் 65
கோப்பெருந் தேவி போக்கற மூடிக்
கையிகந்து பெருகிய செய்கைச் சூழ்ச்சியுட்

உருமண்ணுவா முதலியோர் செயல்[தொகு]

பொய்நில மமைத்த பொறியமை மாடத்
திரும்பும் வெள்ளியு மிசைத்துருக் குறீஇ
அருங்கல மாக்கி யாப்புப்பிணி யுழக்கும் 70
கொலைச்சிறை யிருவரைப் பொருக்கெனப் புகீஇ
நலத்தகு மாத ரடிக்கல முதலாத்
தலைக்கலங் காறுந் தந்நகத் தொடுக்கிச்
சித்திரப் பெரும்பொறி யுய்த்தன ரகற்றி
வத்தவர் கோமான் மனத்தமர் துணைவியொடு 75
தத்துவச் செவிலியைத் தலைப்பெருங் கோயில்
மொய்த்தழல் புதைப்பினும் புக்கவட் போமினென்
றத்தக வமைத்த யாப்புறு செய்கையொ
டருமனை வரைப்பக மாரழ லுறீஇய
கருமக் கள்வரைக் கலங்கத் தாக்கி 80
உருமண் டுவாவு மொருபா லகலப்
பொறிவரித் தவிசிற் பொன்னிறப் பலகை
உறநிறைத் தியற்றி யுருக்கரக் குறீஇய
மாடமும் வாயிலு மோடெரி கவர

சாங்கியத்தாய் வாசவதத்தையைக் கொண்டு யூகிபாற் செல்லல்[தொகு]

இளையரு மகளிருங் களைகண் காணார் 85
வேகுறு துயரமொ டாகுல மெடுப்பத்
தடங்கண் பிறழ்த் தளர்பூங் கொடியின்
நடுங்கிவெய் துயிர்க்கு நன்னுதற் பணைத்தோட்
டேவியைப் பற்றித் தெரிமூ தாட்டி
யூகி கூறிய வொளிநில மருங்கிற் 90
பெருங்கல நிதியம் பெய்துவா யமைத்த
அரும்பிலத் தியாத்த வச்ச மாந்தர்
வாயில் பெற்று வழிபடர்ந் தாங்குப்
போக வமைத்த பொய்ந்நிலச் சுருங்கையுள்
நற்புடை யமைச்சனை நண்ணிய பொழுதிற் 95
கற்புடை மாதரைக் காதற் செவிலி
அற்புடைப் பொருள்பே ரறிவிற் காட்டி
அஞ்சி லோதி யஞ்சனும் பெருமான்
நெஞ்சுபுரை யமைச்ச னீதியிற் செய்த
வஞ்ச மிதுவென வலிப்பக் கூறி 100
அருந்திற லமைச்சனொ டொருங்குதலைப் பெய்தபின்
இன்னகை முறுவலொ டெண்ணியது முடிந்ததென்
றெதிரெழுந்து விரும்பி யூகி யிறைஞ்சி
மதிபுரை முகத்திக்கு மற்றிது கூறும்

யூகி கூறல்[தொகு]

இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் ஞாலத்துத் 105
தன்னி னல்லது தாமீக் கூரிய
மன்னரை வணக்கு மறமாச் சேனன்
காதன் மகளே மாதர் மடவோய்
வத்தவர் பெருமகன் வரைபுரை யகலத்து
வித்தக நறுந்தார் விருப்பொடு பொருந்தி 110
நுகர்தற் கமைந்த புகர்தீர் பொம்மற்
கோல வனமுலைக் கொடிபுரை மருங்குல்
வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தாய்
உருளிக் கேண்மோ வரசியல் வழாஅ
இருளறு செங்கோ லேய ரிறைவன் 115
சேனை நாப்பணும் பெருமான் செய்த
யானை மாயத் தருந்தளைப் படுதலிற்
கொங்கலர் நறுந்தார்க் கோல மார்பிற்
பிங்கல கடகர் பெற்றியிற் பிழைப்பப்
பாஞ்சால ராயன் பரந்த படையொடு 120
மாண்கோ சம்பி வௌவியது மறியான்
அருஞ்சுழி நீத்தத் தாழு மொருவன்
பெரும்புணை பெற்ற பெற்றி போல
நிற்பெறு சிறப்பொடு நெடுநகர் புகல
முற்படத் தோன்றிய முகைப்பூண் மார்வன் 125
தற்படு துயரந் தன்மனத் தணையான்
மட்டுறு கோதாய் மற்றுநின் வனமுலை
விட்டுறை வாற்றா வேட்கையிற் கெழுமிப்
பட்டுறை பிரியாப் படிமையி னவ்வழி
ஒட்டிடை விட்டபி னல்லதை யொழிதல் 130
வாணுதன் மடவோ யரிதுமற் றதனாற்
சேண்வரு பெருங்குடிச் சிறுசொ னீங்க
ஆர்வ நெஞ்சத் தாவது புகலும்
இன்னுயி ரன்ன வென்னையு நோக்கி
மன்னிய தொல்சீர் மரபிற் றிரியா 135
நலமிகு பெருமைநின் குலமு நோக்கிப்
பொருந்திய சிறப்பி னரும்பெறற் காதலன்
தலைமையின் வழீஇய நிலைமையு நோக்கி
நிலம்புடை பெயரினும் விசும்புவந் திழியினும்
கலங்காக் கடவுணின் கற்பு நோக்கி 140
அருளினை யாகி யறியா வமைச்சியல்
பொருளெனக் கருதிப் பூங்குழை மடவோய்
ஒன்னா மன்னனை யுதயண குமரன்
இன்னா செய்துத னிகன்மேம் படநினைச்
சின்னாள் பிரியச் சிதைவதொன் றில்லை 145
வலிக்கற் பாலை வயங்கிழை நீயென்
றொலிக்குங் கழற்கால் யூகி யிரப்ப

வாசவதத்தை தன்னுட் கருதுதல்[தொகு]

நெறிதா ழோதி நெஞ்சி னகத்தே
பொறிதாழ் மார்பிற் புரவலற் கியைந்த
நூல்வல் வாளர் நால்வ ருள்ளும் 150
யூகி முடிந்தன னுருமண் ணுவாவொடு
வாய்மொழி வயந்தக னிடபக னென்ற
மூவரு மல்லன் முன்னின் றிரப்போன்
யாவன் கொல்லிவ னென்றவற் கெதிர்மொழி
யாவதுங் கொடாஅ ளறிவிற் சூழ 155

சாங்கியத்தாய் கூறல்[தொகு]

விம்முறு நிலைமை நோக்கித் துன்னிய
உறுதி வேண்டும் யூகி மற்றிவன்
இறுதி செப்பி யிவண்வந் தோனெனத்
தாய்தெரிந் துரைப்பச் சேயிழை தேறி

வாசவதத்தை செயல்[தொகு]

உரைத்த கருமத் துறுதி விழுப்பமும் 160
கருத்துநிறை காணாது கண்புரை தோழன்
வலித்த கருமமும் வத்தவர் பெருமகன்
உதயண குமரன் யூகி யென்பதை
உரையினு முடம்பினும் வேறெனி னல்ல
துயிர்வே றில்லாச் செயிர்தீர் சிறப்பும் 165
திண்ணிதி ன்றிந்த செறிவின ளாயினும்
பெண்ணியல் பூர்தரப் பெருங்கண் பில்கிக்
குளிர்முற் றாலி குளிர்ப்புள் ளுறாஅ
தொளிமுத் தாரத் துறைப்பவை யரக்கி
அரிமா னன்ன வஞ்சுவரு துப்பினெம் 170
பெருமான் பணியன் றாயினுந் தெரிமொழி
நூலொடு பட்ட நுனிப்பியல் வழாமைக்
கால வகையிற் கருமம் பெரிதெனல்
நெறியிற் றிரியா நீர்மையிற் காட்டி
உறுகுறை யண்ண லிவன்வேண் டுறுகுறை 175
நன்றே யாயினுந் தீதே யாயினும்
ஒன்றா வலித்த லுறுதி யுடைத்தெனக்
கைவரை நில்லாது கனன்றகத் தெழுதரும்
வெய்துயிர்ப் படக்கிநீ வேண்டியது வேண்டாக்
குறிப்பெமக் குடைமை கூறலு முண்டோ 180
மறத்தகை மார்வன் மாய யானையிற்
சிறைப்படு பொழுதிற் சென்றவர் பெயர்க்க
மாய விறுதி வல்லை யாகிய
நீதி யாளநீ வேண்டுவ வேண்டென
முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி 185
அண்ண லரசற் காகுபொருள் வேண்டும்
ஒண்ணுதன் மாத ரொருப்பா டெய்தி
அரிதின் வந்த பெருவிருந் தாளரைச்
சிறப்புப் பலியறாச் செல்வனிற் பேணும்
பெறற்கரும் பெரும்பண் பெய்திய தெனக்கென 190
அசதிக் கிளவி நயவர மிழற்றி
நேர்ந்த மாதரை நெடுந்தகைக் குருசில்
பேர்ந்த காலைப் பிழைப்பில னாகுதல்
அறியு மாத்திர மவ்வழி யமைத்துச்
செறியச் செய்த செவிலியுந் தானும் 195
மறுதர வுடைய மாயச் சூழ்ச்சி
உறுதியொ டொளித்தன ருள்ளியது முடித்தென்.

2 17 தேவியைப் பிரித்தது முற்றிற்று.