உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/2 4 ஆறாம் திங்கள் உடல்மயிர் களைந்தது

விக்கிமூலம் இலிருந்து
(2 4 ஆறாம் திங்கள் உடல்மயிர் களைந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 4 ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது கருதியது முடித்த கடிநாட் கோலமொடு பகுதி ஞாயிற் றுருவொளி திகழக் கலிகெழு மூதூர் கைதொழு தேத்த வலிகெழு நோன்றாள் வத்தவ ரிறைவன்

பிரச்சோதனன் சிறப்பு

[தொகு]

முதுநீர்ப் பொழிலுகந் தெதிரின் றோதப் 5
பதினா றாயிரம் பதின்று வகைய
சுருக்க மின்றிச் சூழ்ந்துடன் றிரியாப்
பெருக்கத் தானைப் பிரச்சோ தனற்குப்

பிரச்சோதனனுடைய தேவியர்

[தொகு]

பெருநில மன்னர் திருநகர்ப் பிறந்துதம்
நாட்டுப்பெயர் பொறித்த சூட்டுப்பொலி சுடர்நுதற் 10
கொடிப்பூண் டிளைக்குங் கோல வாகத்து
வடிப்போழ்ந் தன்ன வாளரித் தடங்கண்
அருந்தவர்க் காயினுந் திருந்துமுக மிறைஞ்சாது
செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்
பொன்புனை மலரின் பகற்சி போல 15
வெறுத்த வேட்கைத் தாமுளஞ் சிறப்பக்
காதலற் கவாஅங் காம நோக்கத்
தீரெண் ணாயிரர் பேரெணப் பட்ட
ஓவிய ருட்கு முருவக் கோலத்துத்

வாசவதத்தை தாயின் சிறப்பு

[தொகு]

தேவியர்க் கெல்லாந் தேவி யாகிக் 20
கோவீற் றிருப்புழிப் பூவீற் றிருந்த
திருமகள் போல வொருமையி னொட்டி
உடன்முடி கவித்த கடன்றி கற்பின்
இயற்பெருந் தேவி வயிற்றகத் தியன்ற
வட்டப் பெரும்பூண் வாசவ தத்தையொடு 25
கட்டி லேற்றங் கடந்த பின்னர்

மணக்காற் பந்தர் அமைத்தல்

[தொகு]

உயர்ந்த நண்பி னுருமண் ணுவாவும்
வயந்தக குமரனும் வத்தவற் கியற்றிய
….. ரளங் கழிந்து மூதூர் வாயிற்
றம்பெயர் நிறீஇய மன்பெரு மாந்தரும் 30
நிறையோம் பொழுக்கத்து மறையோம் பாளரும்
பன்னகர் தோறு மன்னவன் வேண்ட
முனைவர் வகுத்த புனைபூ ணகலத்துக்
காழகத் தொன்னூற் கருதுநெறி நுனித்ததன்
ஆழமைக் கடங்கா வமைவரு காட்சி 35
அரும்பொரு ளுணரும் பெருங்கணிச் சங்கமும்
திணைகளுங் கணக்கரு மினையவர் மொய்த்து
நாற்கயி றமைத்துக் கோற்கயிறு கொளீஇ
நன்குநிலை பெற்ற நாற்பத் தையணங்
குண்பத மெட்டெட் னெண்வர வாங்கி 40
எணபத் தெழுகோற் றண்கையிற் றழீஇக்
கணக்க மாந்தர் கயிறிட் டளந்த
மணக்காற் பந்தருள் வடமென் மருங்குற்

இடம் திருத்தல்

[தொகு]

கலத்தொடு புணர்ந்த நலத்தகு நண்பின்
அழுக்கா றகன்ற வொழுக்கா றோம்பிக் 45
கைவினை யைந்துங் கற்றகத் தடக்கி
மெய்யிற் றூய்மையொடு மேதகு வனப்பிற்
செயிர்வினை கடிந்துதஞ் சிறப்புவழித் தாங்கி
மயிர்வினை நுனித்த மாசில் கம்மத்துச்
சிற்பியற் புலவர் நற்கென நாட்டிப் 50
பதர்ச்சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கிப்
பொருட்சொன் னிரப்பும் புலவர் போலக்
கல்லு மோடும் புல்லுங் கரியும்
உமியு மயிரு மென்பு முட்பட
அமைவி றன்மைய வரித்துடன் களைந்து 55
விண்மேம் படூஉம் விழுத்தக வுடைத்தாய்
மண்மேம் படுத்துற மணிநிழ லுறீஇ
வடக்குங் குணக்கும் வகையுளிப் பணித்துக்
குடக்குந் தெற்குங் கோண முயரி
நிரப்பங் கொளீஇ நின்ற நிலமிசை 60
விசும்புறை தேவர் வேள்விச் சேதான்
பசுஞ்சோற் றமலைப் பாசங் கொளீஇ
மறுவின் றமைந்த நறுவெண் சாந்திற்
பத்தியுங் கொடியும் பல்வழி யெழுதி
முத்தமு மணியுஞ் சித்திரத் தியற்றிய 65
ஆடகப் பொன்னு மகனில முதுபொழிற்
றன்பெயர் கொளீஇய மன்பெருஞ் சீர்த்தி
மரக்களி யன்ன திருத்தகு பொன்னும்
இரத்தினக் குப்பையு மிலங்கொளிப் பவழமும்
இன்னவை பிறவும் பன்முறை பண்ணித் 70
தொல்லோர் வகுத்தநூற் றுறைமுறை போகிய
நல்லா சிரியர் நடுவுநிலை யமைத்துக்
கீழ்த்திசை முதலா வாழ்த்துபு வணங்கித்
தெய்வம் பேணிக் கைவினைக் கம்மத்துச்
சத்தி முகமே சக்கர வட்டம் 75
பத்தி வரிப்பே பாவை நுடக்கம்
குஞ்சர முகமே நந்நி மலரவை
எஞ்சாத் திருவடி வெனப்பெய ரிவற்றுட்
போரடு மன்னர்க்குப் புரையோர் பகழ்ந்த
பாசடைத் தாமரைத் தாதகத் துறையும் 80
மாசின் மடமகண் மருங்கின் வடிவாய்க்
குலாஅய்க் கிடந்த கொலக் கோணத்துக்
கலாஅய்க் கிடந்து கவ்விய கொழுந்தின்
வள்ளியு மலருங் கொள்வழிக் கொளீஇ
வலமுறை வகுத்த நலமுறை நன்னகர் 85
நாற்பெரு வாயின் முதறொறு மேற்பத்
தமனியப் பேரிற் றலைநிலந் தழீஇய
கொழுங்களி யுழுந்துஞ் செழுங்கதிர்ச் செந்நெலும்
உப்பு மரிசியுங் கப்புரப் பளிதமொ
டைவகை வாசமுங் கைபுனைந் தியற்றிய 90
முக்கூட் டமிர்து மக்கூட் னமைத்துத்
தேனும் பாலுந் தயிருங் கட்டியும்
ஆனெயும் வெண்ணெயு மனையவை பிறவும்
பதின்று மணியும் பைம்பொன் மாலையும்
நுதியிற் பெய்து விதியுற விரீஇப் 95
பொதியிற் சந்தனம் போழ்ந்துகொண் டியற்றிக்
கதிரொளி பயின்ற கம்மக் கைவினை
நாற்கா லமைத்த பாற்பெரும் படுமணைப்
பொங்குமயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ
நண்ணிய சிறப்பொடு நாற்பெருந் திசையும் 100
பண்ணிய வுணவின் றிண்ணிலைக் குப்பையுள்
முடிமுதற் குத்தி யடிநிலைக் கமைந்த
பைம்பொன் விளக்கிற் செஞ்சுடர் மாட்டிக்

உதயணன் வருதல்

[தொகு]

குறைவின் றமைந்த கோல நுட்பத்து
மறுவின் றமர்ந்த மங்கலப் பேரணி 105
மன்ன குமரன் றன்னோர் சூழ
உருத்த மன்ன ரூர்ச்சி வேழத்து
மருப்புக்கை யமைத்து வாய்முத றோறும்
உருக்குறு தமனியத் தொழுகுகொடி யோட்டிப்
பவழக் கொட்டைப் பல்வினை நுனித்த 110
திகழணிச் செருப்பிற் சேவடி யிழிந்து
கடவுட் டானம் வலமுறை வந்தபின்
அடர்பொற் றிருநக ரறியக் காட்டி
நிலத்துமிசை யிழிந்த நிகரி னெடுமுடி
நிலத்தகை யிந்திர னெழிற்பொலி வொப்ப 115
இலக்கண விருக்கை திருத்திய பின்றை

வாசவதத்தை வந்து அமர்தல்

[தொகு]

நாணுக் கவின்கொண்ட நனிநா கரிகத்
தியாணர்ப் பூந்துகி லணிந்த வல்குல்
இலைப்பூண் கவைஇ முலைப்புறம் புதைஇப்
பொற்கொடி யிழையொடு நற்குடன் றாழ 120
ஏகவுத் தரிய மிடைச்சுவல் வருத்த
வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு
பட்டுச்சுமந் தசைந்த பரவை யல்குல்
இயைந்தணி பெற்ற வேன்ற வவ்வயிற்
றசைந்தணி கொண்ட வம்மென் சாயற் 125
றாமரை யெள்ளிய காமரு திருமுகத்
தின்பக் காம னெய்கணை போலச்
செங்கடை போழ்ந்த சிதரரி மழைக்கண்
வண்ணக் கோதை வாசவ தத்தையைச்
செண்ணக் காஞ்சனை செவ்விதிற் தழீஇ 130
இகல்வரை மார்பற் கியைய விரீஇயபின்

அந்தணர் முதலியோர் செயல்

[தொகு]

அகன் மனைக் காவ லாற்றுளி நிறீஇ
எண்டிசை மருங்கினு மிவர் திரை யேய்ப்பக்
கண்டப் பூந்திரை காழ்முதற் கொளீஇ
எழுதுவினைக் கம்மத்து முழுமுதற் கோத்த 135
முத்த மாலை முடிமுதல் வருட
ஒத்த வோரை நோக்கி யோங்கிய
கைத்தொழி னுனித்த வித்தக வாளர்
பொன்புனை நன்கலத் தின்பத மார்ந்தபின்
மணியறைந் தன்ன மாணிருங் குஞ்சி 140
அணிவலஞ் சுரிந்த வமைதிக் கேற்ப
வளர்பிறை யன்ன மல்லிகைக் கத்திகை
கிளர்பொற் போதொடு களையறப் பிணித்த
வாக்கமை சிகைமுதற் பாற்பட வடைச்சி
மகரங் கவ்விய மணிக்குழைக் காதினர் 145
தகரங் கலந்த தண்ணறுஞ் சாந்தினர்
பானிற வெண்டுகி லானத் தானையர்
இறைமகற் கியன்ற குறைவில் செல்வமொ
டந்தண ரீண்டி யடித்துக ளாற்றி
மந்திர விதியின் வாய்ப்பூச் சியற்றித் 150
தந்தொழின் முடித்துத் தலைவனைக் குறுகி
வெண்ணிற மலருந் தண்ணறுஞ் சாலியும்
புண்ணியப் புல்லும் பொன்னொடு முறைமையின்
மண்ணார் மணிப்பூண் மன்னனொடு மாதரைச்
சென்னியு முச்சியுஞ் சேடுபடத் தெளித்துக் 155
கூப்பிய கையர் காப்பொடு பொலிந்த
அமரரு முனிவரு மமர்வன ராகி
ஆயுளுந் திருவும் போகமும் பொலிவும்
மேயினர் தருகென மிகப்பல வாழ்த்தி
மறையிற் கிரிகையின் முறையறித் தோதி 160

நாவிதன் செயல்

[தொகு]

மின்வா ளழித்த மேதகு கைவினைப்
பொன்வாள் பற்றிப் பன்மாண் பொலிகென
வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி
இலக்கணம் பிழையா வெஃகமை யிருப்பின்
நீரளந் தூட்டிய நிறையமை வாளினைப் 165
பஞ்சிப் பட்டொடு துரூஉக்கிழி நீக்கிப்
பைங்கதி ரவிர்மதிப் பாகத் தன்ன
அங்கேழ்க் கன்மிசை யறிந்துவாய் தீட்டி
வெங்கேழ்த் துகின்மிசை விதியுளி புரட்டிச்
செங்கேழ்க் கையிற் சிறந்துபா ராட்டி 170
ஆசறு நறுநீர் பூசனை கொளீஇ
வாட்டொழிற் கம்மம் வல்லிதிற் பிழையாது
சேட்டெழிற் பொலிந்த திருமுகக் கேற்ப
மூரிக் கொள்ளான் முனிதல் செல்லான்
ஆவிக் கொள்ளா னயர்ந்தும் பிறர்நோக்கான் 175
சீர்கெழு நெடுந்தகை செவ்விதிற் றிரியான்
கண்ணினு மனத்தினுங் கையினு மமைத்த
மண்ணுவினை மயிர்த்தொழி னன்னல நாவிதன்
எல்லை வகுப்ப…..
எதிர்நோக் காற்றா விலங்கி.ழை முகத்தையும் 180
மதிமாசு கழீஇய வண்ணம் போலக்
கதிர்மே லிலங்கக் கைவினை முடித்தபின்
அடிவினைக் கம்மியர் வெடிபட வடுக்கிய
உயர்நலக் கோலத் தொள்ளொளி திகழக்
வகையமை கொல்லியின் வசையறத் துடைத்துச் 185
சேவடிக் கேற்பச் செழுமதிப் பாகென
வாருகிர் குறைத்து வனப்புவீற் றிரீஇய
ஒண்ணிறக் கல்லி னன்னிறம் பெறீஇ
விரலிற் கொண்ட வெண்ணிற நுண்டாது
விரிகதிர் மதியின் விளங்கொளி யழிப்ப 190
நிறம்பெற வுரிஞ்சி நேர்துகிற் றுடைத்தும்
தண்டா மரையி னகவிதழ் போலப்
பண்டே சிவந்த படிய வாயினும்
கண்டோர் மருளக் கைவளங் காட்டி
அரத்தப் பஞ்சி யணிநிறங் கொளீஇப் 195
பரப்பும் விதிர்ப்பும் பருப்பு மின்றி
அணித்தலைச் சார்ங்க மணிபெற வெழுதி
அருவகை கம்ம முருவொளி திகழ
வல்லோர் முடித்த பின்றைப் பல்லோர்
அருங்கல வெறுக்கை யார வீசி 200
விரும்புறு மனத்தவர் விண்ணவர் காப்ப
மன்னுக வேந்தே மண்மிசை நீடென
அன்னவை கலந்த வார்வ நாப்பண்
எண்ணுவரம் பறியா வினபச் செல்வமொடு
மண்ணுவினை முடிந்தன்றான் மயிர்வினை மகிழ்ந்தென். 205

2 4 ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது முற்றிற்று.