உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/4 14 மணம்படு காதை

விக்கிமூலம் இலிருந்து
(4 14 மணம்படு காதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

4 14 மணம்படு காதை

வாசவதத்தை மான்னீகையின் மயிரைக் குறைக்கப் புகுதல்

[தொகு]

புலர்ந்த காலைப் புதுமண மாதரை
மாபெருந் தேவி கூவினள் சீறி
ஓவிய வெழினித் தூணொடு சேர்த்துக்
கொற்றவன் றன்னொடு கூத்தப் பள்ளியுட்
சொற்றது சொல்லெனக் கச்சினின் யாத்தனள் 5
அருகொரு மாதரை யிவண்மயி ரரிதற்
கொருகத் தரிகை தருகென வுரைப்ப

வயந்தகன் உதயணனைத் தேடுதல்

[தொகு]

மறையக் கண்ட வயந்தக னவ்வயின்
விரைவிற் சென்று வேந்தைத் தேட

உதயணன் நிகழ்ந்ததை வயந்தகனுக்குக் கூறல்

[தொகு]

அறிந்த வேந்த னறிபயிர் காட்டப் 10
பரிந்தன னாகிப் பட்டதை யுரைப்ப
மற்றவ ளொருமயிர் கருவி தீண்டின்
இற்ற தென்னுயி ரிதுநீ விலக்கென
நிகழ்ந்த தென்னென நீகடைக் கூட்ட
முடிந்த தென்ன மடந்தையர் விளையாட் 15

வயந்தகன் கூறல்

[தொகு]

டன்றியுங் கரவொடு சென்றவள் புதுநலம்
கொண்டொளித் தருளக் கூறலு முண்டோ
கொற்றத் தேவி செற்றந் தீர்க்கும்
பெற்றிய ரெவரே யாயினும் பெயர்வுற்
றாறேழ் நாழிகை விலக்குவ லத்துணை 20
வேறொரு வரைநீ விடுத்தரு ளென்று

வயந்தகன் வாசவதத்தையைக் காணல்

[தொகு]

வென்றி வேந்தன் விடுப்ப விரைவொடு
சென்றறி வான்போற் றேவியை வணங்கிக்
கொற்றவற் றேடக் கோபமென் றொருத்தி
கைத்தலத் தமைப்பக் கானடுங் கினன்போற் 25
குறையிவட் கென்னெனக் கோமக ளறியா

வாசவதத்தை கூற்று

[தொகு]

வார்ப்பொலி கழற்கான் மன்னவ ருருவிற்
றூர்த்தக் கள்வன் பாற்போய்க் கேளென

வயந்தகன் கூறல்

[தொகு]

குறையிவட் குண்டேற் கேசங் குறைத்தற்
கறிவேன் யானெனக் குறையெனக் கூறலும் 30
மற்றதற் கேற்ற வகைபல வுணனவை

கத்தரிகைகளின் வகை

[தொகு]

பத்திக ளாகியும் விற்பூட் டாகியும்
அணில்வரி யாகியு மான்புற மாகியும்
மணியற லாகியும் வயப்புலி வரிபோல்
ஒழுக்கத் தாகியு முயர்ந்துங் குழிந்தும் 35
கழுக்கொழுக் காகியுஙு காக்கையடி யாகியும்
துடியுரு வாகியுஞ் சுழலா றாகியும்
பணிவடி வாகியும் பாத்திவடி வாகியும்
இருப்பவை பிறவுமா மெடுத்ததை யருளுநின்
திருக்கர மலர்மயிர் தீண்ட றகாதால் 40
ஒருகத் தரிகை தருகென வாங்கி

வயந்தகன் செயல்

[தொகு]

ஒருபுல் லெடுத்தன னதனள வறியா
நான்மையின் மடித்தொரு பாதி கொண்டதன்
காதள வறிந்தணி யாணியும் பிறவும்
மதிப்போடு பல்காற் புரட்டின னோக்கி 45
எடுத்திரு கையுஞ் செவித்தலம் புதையாக்
கண்சிம் புளியாத் தன்றலை பனித்திட்

வயந்தகன் கூறல்

[தொகு]

டிங்கித னிலக்கண மெளிதோ கேளினி
நீர்மையுங் கூர்மையு நெடுமையுங் குறுமையும்
சீர்மையுஞ் சிறப்புஞ் செறிந்துவனப் பெய்திப் 50
பூத்தொழின் மருவியது புகர்வயி னணைந்தோர்க்
காக்கஞ் செய்யு மணங்கொடு மருவிய
இலக்கண முடைத்தீ திவண்மயிர் தீண்டின்
நலத்தகு மாதர்க்கு நன்றா மதனால்
மற்றொன் றுளதேற் பொற்றொடி யருணீ 55
இத்தகைத் தீதென வெடுத்தன னெறிய

உதயணன் யூகியை வருவித்துக் கூறல்

[தொகு]

ஆகிய துணரும் வாகை வேந்தன்
யூகியை வருகெனக் கூவினன் கொண்டு
புகுந்ததை யெல்லாங் கணந்தனிற் புகல

யூகி விடையளித்தல்

[தொகு]

வயந்தகன் மொழிபொழு திழிந்த தென்செயல் 60
யானு மவ்வள வானவை கொண்டு
தேனிமிர் கோதை கேசந் தாங்குவென்
மற்றறி யேனென வணங்கினன் போந்து

யூகி பித்தர் வேடந் தரித்தல்

[தொகு]

கற்றறி வித்தகன் பொற்பணி வெண்பூக்
கோவைத் தந்த மேவரச் சேர்த்திக் 65
கூறை கீறிச் சூழ்வர வுடீஇ
நீறுமெய் பூசி நெடிய மயிர்களை
வேறுவே றாகும் விரகுளி முடித்துக்
கண்டோர் வெருவக் கண்மல ரடக்கம்
கொண்டோ னாகிக் குறியறி யாமற் 70
கைத்தல மொத்தாக் கயிட படை கொட்டிப்
பித்த ருருவிற் றுட்கெனத் தோன்றலும்

தோழியர் யூகியின் வேடத்தைக் கண்டு ஓடல்

[தொகு]

ஏழை மாதரைச் சூழ்வர நின்ற
பாவையர் பலரும் பயந்திரிந் தோடி
விழுநரு மெழுநரு மேல்வர நடுங்கி 75
அழுநருந் தேவிபின் பணைநரு மாகத்
தேன்றேர் கூந்த றானது நோக்கி
மேன்மே னகைவர விரும்பின ணிற்ப

வயந்தகன் சிலதியை உதயணன்பால் அனுப்புதல்

[தொகு]

நின்ற வயந்தக னிகழ்ந்ததை யுணர்த்தென
அங்கொரு சிலதியை யரசற் குய்ப்பப் 80

உதயணன் பதுமாபதியை வருவித்தல்

[தொகு]

புதுமான் விழியிற் புரிகுழற் செவ்வாய்ப்
பதுமா பதியை வருகெனக் கூஉய்
வில்லேர் நுதல்வர வேந்தன் சென்றெதிர்
புல்லினன் கொண்டு மெல்லென விருந்தொன்
றுரைப்ப வெண்ணி மறுத்துரை யானாய்த் 85

பதுமாபதி உதயணனை வினாவுதல்

[தொகு]

திகைப்ப வாயிழை கருத்தறிந் தனளாய்
அடிக ணெஞ்சிற் கடிகொண் டருளுமக்
கரும மெம்மொ டுறையா தென்னென

உதயணன் பதுமாபதியை வாசவதத்தையின்பால் விடுத்தல்

[தொகு]

யானுரை செய்யக் கூசுமென் றவ்வை
தானே கூறு நீயது தாங்கியென் 90
செயிர்கா ணாத தெய்வ மாதலின்
உயிர்தந் தருளென வுரவோன் விடுப்ப

பதுமாபதி வாசவதத்தையை வேண்டிக் கொள்ளல்

[தொகு]

முறுவல்கொண் டெழுந்து முன்போந் தாயிழை
தகும்பதந் தாழத் தானவட் கறியப்
புகுந்ததை யுணர்த்த வருநதிவள் பொருளாச் 95
சீறி யருளுதல் சிறுமை யுடைத்திது
வீறுயர் மடந்தாய் வேண்டா செய்தனை
அன்புடைக் கணவ ரழிதகச் செயினும்
பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை
அறியார் போலச் சிறியோர் தேஎத்துக் 100
குறைகண் டருளுதல் கூடா தன்றியும்
பெற்றேன் யானிப் பிழைமறந் தருளென
மற்றவள் பின்னரும் வணங்கின ணிற்பக்

கோசலத்தரசனுடைய தூதுவர் வருகையைக் காவலர் உதயணனுக்குரைத்தல்

[தொகு]

கோமகற் கவ்வயிற் கோசலத் தவர்புகழ்க்
காவலன் தூதுவர் கடைத்தலை யாரெனக் 105
கடைகாப் பாளன் கைதொழு துரைப்ப

தூதுவரை உதயணன் அழைத்துவரச் செய்தல்

[தொகு]

விடைகொடுத் தவரைக் கொணர்மி னீரெனப்
பொன்றிகழ் கோயில் புகுந்தனர் தொழுதொரு

தூதுவர் ஓலையை அளித்தல்

[தொகு]

மந்திர வோலை மாபெருந் தேவிக்குத்
தந்தனன் றனியே வென்றி வேந்தன் 110
கோவே யருளிக் கொடுக்கென நீட்டலும்
ஏயமற் றிதுவு மினிதென வாங்கி

ஓலையைச் சிலதி மூலமாக வாசவதத்தைக்கு உதயணன் அனுப்பல்

[தொகு]

ஏவற் சிலதியை யாவயிற் கூஉய்த்
தேவிகட் போக்கத் திறத்துமுன் கொண்டு

வாசவதத்தை பதுமாபதியைக் கொண்டு ஓலையைப் படிக்கச் செய்தல்

[தொகு]

பதுமா பதியைப் பகருகென் றளிப்ப 115
எதிரெழுந் தனளா யதுதான் வாங்கிக்

ஓலையில் எழுதப்பட்ட செய்தி

[தொகு]

கோசலத் தரச னோலை மங்கை
வாசவ தத்தை காண்கதன் றங்கை
மாசின் மதிமுகத்து வாசவ தத்தை
பாசவற் படப்பைப் பாஞ்சா லரசன் 120
சோர்விடம் பார்த்தென் னூரெறிந் தவளுடன்
ஆயமுங் கொண்டு போயபின் பவனை
நேர்நின் றனனாய் நெறிப்படப் பொருதுகொல்
வத்தவர் பெருமான் மங்கையர் பலருடன்
பற்றினன் கொண்டு நற்பதிப் பெயர்ந்து 125
தனக்குத் தங்கை யியற்பது மாபதி
அவட்குங் கூறிட் டளிப்பத் தன்பால்
இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்
பயந்த நாளொடு பட்டதை யுணர்த்தாள்
தன்பெயர் கரந்து மான னீகையென் 130
றங்கொரு பெயர்கொண் டிருந்ததுங் கேட்டேன்
அன்புடை மடந்தை தங்கையை நாடி
எய்திய துயர்தீர்த் தியான்வரு காறும்
மைய லொழிக்க தைய றான்மற்
றிதுவென் குறையென வெழுதிய வாசகம் 135

பதுமாபதி ஓலையை வாசவதத்தையிடம் கொடுத்தல்

[தொகு]

பழுதின் றாக முழுவது முணர்ந்து
வாசக முணரேன் வாசிமி னடிகளென்
றாசி றவ்வை தன்கையிற் கொடுப்ப

வாசவதத்தை ஓலையைப் படித்துத் தான் செய்ததற்கு வருந்துதல்

[தொகு]

வாங்கிப் புகழ்ந்து வாசகந் தெரிவாள்
ஏங்கிய நினைவுட னினைந்தழு துகுத்த 140
கண்ணீர் கொண்டு மண்ணினை நோக்கிப்
பெண்ணீர் மைக்கியல் பிழையே போன்மெனத்
தோயு மாயலிற் றுண்ணெ னெஞ்சமோ
டாயிழை பட்டதற் காற்றா ளாயவள்

வாசவதத்தை மான்னீகையின் கட்டை அவிழ்த்து இரங்கல்

[தொகு]

கையிற் கட்டிய கச்சவிழ்த் திட்டு 145
மைவளர் கண்ணியை வாங்குபு தழீஇக்
குழூஉக்களி யானைக் கோசலன் மகளே
அழேற்கவெம் பாவா யரும்பெறற் றவ்வை
செய்தது பொறுவெனத் தெருளாள் கலங்கி
எழுதரு மழைக்க ணிரங்கிநீ ருகுப்ப 150
அழுகை யாகுலங் கழுமின ளழிய
விம்மி விம்மி வெய்துயிர்த் தென்குறை
எம்முறை செய்தே னென்செய் தேனென
மாதர்க் கண்ணீர் மஞ்சன மாட்டி
ஆதரத் துடைத்தனள் பேதைகண் டுடைத்துக் 155
கெழீஇய வவரைக் கிளந்துடன் போக்கித்

மானனீகையை வாசவதத்தை அலங்கரித்தல்

[தொகு]

தழீஇக் கொண்டு தானெதி ரிருந்து
தண்ணென் கூந்த றன்கையி னாற்றிப்
பண்ணிய நறுநெயு மெண்ணெயும் பெய்து
நறுநீ ராட்டிச் நெறிதுகி லுடீஇப் 160
பதுமையுந் தானு மினியன கூறிப்
பொருவில் பக்கத்துப் பொற்கல மேற்றி
வருகென மூவரு மொருகலத் தயில

வயந்தகன் உதயணனுக்குத் தெரிவித்தல்

[தொகு]

வரிநெடுந் தொடையல் வயந்தக னவ்வயின்
விரைவிற்சென்று வேந்தற் குரைப்ப 165

உதயணன் மகிழ்தல்

[தொகு]

முகிறோய் மாமதி புகர்நீங் கியதெனத்
திருமுக மலர முறுவல்கொண் டெழுந்து
வருகெனத் தழீஇ முகமன் கூறி
ஒருபுட் பெற்றே னெருத லினிதென

உதயணன் மான்னீகையை மணஞ்செய்து கொள்ளல்

[தொகு]

அதுநிகழ் வேலையிற் புதுமண மாதரை 170
வதுவைக் கோலம் பதுமை புனைகென்
றங்கொரு சிலதியைச் செங்கோல் வேந்தன்
தன்பான் மணநிலை சாற்றென் றுரைப்பப்
பிணைமலர்த் தொடையற் பெருமக னவ்வயிற்
பணைநிலைப் பிடிமிசைப் பலர்வரச் சாற்றி 175
விரைபரித் தேரொடு படைமிடைந் தார்ப்ப
முரசுமுழங்கு முற்றத் தரசுவந் திறைகொளக்
கோலத் தேவியர் மேவினர் கொடுப்ப
ஓவிய ருட்கு முருவியை யுதயணன்
நான்மறை யாளர் நன்மணங் காட்டத் 180
தீவலஞ் செய்து கூடிய பின்றை
முற்றிழை மகளிர் மூவரும் வழிபடக்
கொற்ற வேந்தர் நற்றிறை யளப்ப
நல்வளந் தரூஉம் பல்குடி தழைப்பச்
செல்வ வேந்தன் செங்கோ லோச்சித் 185
தானா தரவு மேன்மேன் முற்றவும்
ஆனா தொழுகுமா லல்லவை கடிந்தென்.

4 14 மணம்படு காதை முற்றிற்று.