உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/4 4 உருமண்ணுவா வந்தது

விக்கிமூலம் இலிருந்து
(4 4 உருமண்ணுவா வந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

4 4 உருமண்ணுவா வந்தது

உதயணன் நிலை

[தொகு]

பள்ளி யெய்திய நள்ளிரு ணீங்கலும்
விளியா விருப்பினொ டொளிபெறப் புதுக்கி
மாசில் கற்பின் மருந்தேர் கிளவி
வாசவ தத்தையை வாய்மிக் கரற்றி
எனக்கணங் காகி நின்றநீ பயிற்றிய 5
வனப்பமை வீணை வந்தது வாராய்
நீயே யென்வயி னினைந்திலை யோவென
வகைத்தார் மார்ப னகத்தே யழல்சுடத்
தம்பியர்ப் பெற்றுந் தனியாழ் வந்தும்
இன்பம் பெருக வியைந்துண் டாடான் 10
செல்லுங் காலை மல்லன் மகதத்துச்
செருமுன் செய்துழிச் சிறைகொளப் பட்ட
உருமண் ணுவாவிற் குற்றது கூறுவென்

தருசகன் செயல்

[தொகு]

சங்க மன்னர் தந்த முரிமை
புன்கண் டீரப் புறந்தந் தோம்பி 15
வாட்டொழிற் றருசகன் மீட்டனன் போக்கி
மன்னர் சிறையும் பின்னர்ப் போக்குதும்
உருமண் ணுவாவை விடுக விரைந்தெனக்
கரும மாக்களைப் பெருமகன் விடுத்தலிற்

சங்கமன்னர் உருமண்ணுவாவைச் சிறை விடுத்தல்

[தொகு]

பகைகொண் மன்னர் மகவுவந் தொன்றி 20
இழிந்த மாக்களொ டின்ப மார்தலின்
உயர்ந்த மாக்களொ டுறுபகை யினிதென
மகிழ்ந்த நெஞ்சமொடு மன்னவற் புகழ்ந்து
செயப்படு கருமஞ் செறியச் செய்ய
மயக்கமி லமைச்சனை மன்னர் விட்டபின் 25

உருமண்ணுவாவின் செயல்

[தொகு]

திருவலக் கருமந் திண்ணிதிற் செய்துவந்
துருமண் ணுவாவுந் தருசகற் கண்டு
சிறைநனி யிருந்த சித்திராங் கதனைப்
பொறைமலி வெந்நோய் புறந்தந் தோம்பிப்
போக்கிய பின்றை வீக்கங் குன்றாத் 30
தலைப்பெருந் தானைத் தம்மிறைக் கியன்ற
நிலைப்பா டெல்லா நெஞ்சுணக் கேட்டு
வரம்பி லுவகையொ டிருந்த பொழுதின்

சாதகன் செயல்

[தொகு]

இயைந்த நண்பி னியூகியோ டிருந்த
பயன்றெரி சூழ்ச்சிப் பதின்ம ரிளையருட் 35
டீதில் கேள்விச் சாதக னென்போன்
உருமண் ணுவாவும் யூகியுந் தறியாக்
கரும மேற்கோ டெரிநூ லாகப்
பாவிடு குழலி னாயிடைத் திரிதர

யூகி சாதகனை உருமண்ணுவாவிடம் விடுத்தல்

[தொகு]

முனிவில னாதலின் முன்னா ளெண்ணிய 40
செய்வினை முடித னோக்கித் தேவியைக்
கைவயிற் கொடுத்தல் கரும மென்றுதன்
அருமறை யோலை யரும்பொறி யொற்றி
உருமண் ணுவாவினைக் கண்டிது காட்டென

சாதகன் செயல்

[தொகு]

விரைவனன் போந்து தருசகன் காக்கும் 45
இஞ்சி யோங்கிய விராச கிரியத்து
வெஞ்சின வேந்தன் கோயின் முற்றத்துத்
குஞ்சரத் தானத்து நின்றோற் குறுகிக்
குறியிற் பயிர்ந்து மறையிற் போகி
ஓலை காட்ட வுள்ளம் புகன்று 50

உருமண்ணுவா சாதகனை வினவல்

[தொகு]

மேலை பட்டவுந் தேவி நிலைமையும்
வாசனை யகத்தே மாசற வுணர்ந்தும்
எம்வயிற் றீர்ந்தபிற் செய்வகை யெல்லாம்
வாயி னுரைக்கெனச் சாதகன் கூறும்

சாதகன் கூற்று

[தொகு]

அற்பல லூர்தர வடல்வே லுதயணன் 55
ஒற்கம் படாமை யுணர்ந்தன மாகி
அரும்பெறற் றோழி யாற்றும் வகையிற்
பெருந்தண் கானம் பிற்படப் போகிப்
பற்றின் மாதவர் பள்ளியு ளிருப்பின்
அற்றந் தருமென வதுநனி வலீஇத் 60
தண்புனற் படப்பைச் சண்பைப் பெரும்பதி
மித்திர காம னற்பெருங் கிழத்தியொ
டாப்புற விரீஇய பிற்றை யாருணி
காப்புறு நகர்வயிற் கரந்துசென் றொழுகும்
கழிபெரு நண்பிற் காள மயிடனென் 65
றழிவி லந்தண னவ்விடத் துண்மையிற்
புறப்படு மிதுவெனத் திறப்படத் தெரிந்து
செட்டி மகனொ டொட்டினம் போகிப்
பண்டம் பகரும் பட்டினம் பயின்ற
புண்டரம் புகீஇப் புதைத்த வுருவொடு 70
பொருத்தஞ் சான்ற புரைதபு நண்பின்
வருத்த மானன் மனைவயின் வைத்தபின்
வருத்த மானற் கொத்த தம்முன்
இரவி தத்த னென்னு முரவோன்
பெரும்படை தொகுத்துவந் தரம்புசெய் தலைத்தலின் 75
இருந்த நகரமுங் கலங்க மற்றவன்
அருந்தொழின் மலையா ண்டைந்தன மாகி
இருந்த பொழுதி லிப்பா லரசற்கு
நிகழ்ந்ததை யெல்லா நெறிமையிற் கேட்டுப்
பொன்னிழை மாதரைப் புணர்த்தல் வேண்டும் 80
இன்னே வருகென நின்னுழைப் பெயர்த்தந்
தாங்கவ ரிருந்தன ராதலி னீங்கினிச்
செய்வதை யெல்லா மெய்பெற நாடெனத்
தூதுசெல் லொழுக்கிற் சாதக னுரைப்ப

உருமண்ணுவாவின் செயல்

[தொகு]

ஆற்றல் சான்ற தருசகற் கண்டவன் 85
மாற்ற மெல்லா மாற்றுளிக் கூறி
அவனுழைப் பாட்டகத் த்திபதி யாகிய
தவறில் செய்தொழிற் சத்தி யூகியை
வேண்டிக் கொண்டு மீண்டனன் போந்துழி
அப்பா னின்று முற்பால் விருந்தாய்ப் 90
புண்டர நகரம் புகுந்தன னிருந்த
மண்டமர்க் கடந்தோன் விரைந்தனன் வருகென
எதிர்வரு தூதனொ டதிரக் கூடிச்
சத்தி யூகி முதலாச் சண்பையுள்
மித்திர காமனைக் கண்டுமெலி வோம்பி 95
வருத்தந் தீர்ந்தபின் வருத்த மானன்
பூமலி புறவிற் புண்டரங் குறுகித்
தேமொழித் தேவியொடு தோழனைக் கண்டு
தலைப்பா டெய்தித் தாங்கா வுவகையொடு
நலத்தகு நாகத் துறைவோர் போல 100
இன்ப மகிழ்ச்சியொடு நன்கனம் போந்து
புகழ்க்கோ சம்பிப் புறத்துவந் தயர்வறும்
மகிழ்ச்சி யெய்தி மனம்பிணி வுறூஉம்
மதுகாம் பீர வனமெனுங் காவினுட்
புகுதந் தவ்வழிப் புதுவதின் வந்த 105
விருந்தின் மன்ன ரிருந்துபயன் கொள்ள
இயற்றப் பட்ட செயற்கருங் காவினுள்
மறைத்தன னவர்களைத்திறப்பட விரீஇயபின்
உவந்த வுள்ளமொ டுருமண் ணுவாவும்
புகுந்தனன் மாதோ பொலிவுடை நகரென்.

4 4 உருமண்ணுவா வந்தது முற்றிற்று.