பெருங்கதை/4 6 பதுமாபதியை வஞ்சித்தது

விக்கிமூலம் இலிருந்து
(4 6 பதுமாபதியை வஞ்சித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

4 6 பதுமாபதியை வஞ்சித்தது

உதயணன் உருமண்ணுவாவை வினாவல்[தொகு]

பிரிந்துபின் வந்த பெருந்திற லமைச்சனொ
டருந்திறல் வேந்த னமைவரக் கூடி
இருந்த பின்றை நிகழ்ந்தது கூறெனச்

உருமண்ணுவா நிகழ்ந்தவற்றை உதயணனுக்குக் கூறல்[தொகு]

செருச்செய் மன்னன் சிறையிடைச் செய்தலும்
தருசகன் றன்வயின் விடுத்த தன்மையும் 5
பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்
தெரிய வெல்லாம் விரியக் கூறி

உருமண்ணுவா வயந்தகனிடம் கூறல்[தொகு]

அந்நிலை கழிந்த பின்னிலைப் பொழுதின்
இன்புறு செவ்வியு ளின்னது கூறென
வன்புறை யாகிய வயந்தகற் குணர்த்த 10

உதயணன் செயல்[தொகு]

உருமண் ணுவாவினொ டொருங்குகண் கூடித்
தருமணன் ஞெமரிய தண்பூம் பந்தருட்
டிருமலி மார்பன் றேவி பயிற்றிய
வீணை பெற்றது விரித்தவற் குரைத்துத்
தேனேர் கிளவியைத் தேவி யரற்ற 15

வயந்தகன் உதயணனைக் கேட்டல்[தொகு]

மானங் குன்றா வயந்தகன் கூறும்
நயந்துநீ யரற்று நன்னுத லரிவையும்
பயந்த கற்பிற் பதுமா பதியுமென்
றிருவ ருள்ளுந் தெரியுங் காலை
யாவர் நல்லவ ரறிவினு மொழுக்கினும் 20
யாவரை யுவத்தி யாவதை யுணரக்
காவ லாள கரவா துரையென்

உதயணன் விடை கூறுதல்[தொகு]

முறுவல் கொண்டவ ன்றியு மாயினும்
பல்பூட் சில்சொற் பட்டத் தேவியைச்
சொல்லாட் டிடையுஞ் செல்ல றீர்தலிற் 25
பீடுடை யொழுக்கிற் பிரச்சோ தனன்மகள்
வாடிடை மழைக்கண் வாசவ தத்தை
கண்ணகன் ஞாலத்துப் பெண்ணருங் கலமவள்
செறுந ருவப்பச் செந்தீ யகவயின்
உறுதவ மில்லேற் கொளித்தன டானென 30
மறுகுஞ் சிந்தை மன்னனை நோக்கி

வயந்தகன் கூற்று[தொகு]

வெங்கண் வேந்தர் தங்கட் குற்ற
தங்கண் ஞாலத் தாரே யாயினும்
அகலிடத் துரைப்பி னற்றம் பயத்தலின்
அவரின் வாழ்வோ ரவர்முன் னின்றவர் 35
இயல்பி னீர்மை யிற்றென வுரைப்பின்
வம்ம முறுதல் வினாவது முடைத்தோ
அற்றே யாயினு மிற்றுங் கூறுவென
நயக்குங் காத னல்வளைத் தோளியைப்
பெயர்க்கும் விச்சையிற் பெரியோற் கண்டவன் 40
உவக்கு முபாய மொருங்குடன் விடாது
வழிபா டாற்றி வல்லிதிற் பெறீஇய
கழிபெருங் காதலொடு சென்றபி னவ்வழிக்
காசி யரசன் பாவையைக் கண்டே
வாசவ தத்தையை மறந்தனை யாகிப் 45
பரவை யல்குற் பதுமா பதியோ
டிரவும் பகலு மறியா வின்புற்
றுட்குவரு கோயிலு ளொடுங்குவனை யுறைந்தது
மற்போர் மார்ப மாண்புமற் றுடைத்தோ
அன்னது மாக வதுவே யாயினும் 50
திண்ணிதி னதனையுந் திறப்படப் பற்றாய்
பின்னிது நினைக்கும் பெற்றியை யாதலின்
ஒருபாற் பட்ட தன்றுநின் மனனெனத்

உதயணன் கூற்று[தொகு]

திருவார் மார்பன் றெரிந்தவற் குரைக்கும்
வடுவாழ் கூந்தல் வாசவ தத்தையொ 55
டிடைதெரி வின்மையி னவளே யிவளென
நயந்தது நெஞ்ச நயவா தாயினும்
பால்வகை வினையிற் படர்ந்த வேட்கையை
மால்கடல் வரைப்பின் மறுத்தன ரொழுகுதல்
யாவர்க் காயினு மாகா த்துவென 60
மேவரக் காட்டலு மீட்டுங் கூறுவன்

வயந்தகன் கூற்று[தொகு]

அறியா னிவனென னெறியிற் கேண்மதி
அன்றுநாங் கண்ட வரும்பெற லந்தணன்
இன்றுநாங் காண விந்நகர் வந்தனன்
மானேர் நோக்கி மாறிப் பிறந்துழித் 65
தானே யாகத் தருகுவெ னென்றனன்
பனிமலர்க் கோதைப் பதுமையை நீங்கித்
தனியை யாகித் தங்குதல் பொருளெனக்

உதயணன் பதுமாபதி முதலியோரை வஞ்சித்து அகற்றிச் சென்று துயிலல்[தொகு]

கேட்டே யுவந்து வேட்டவன் விரும்பி
மாற்று மன்னரை மருங்கறக் கெடுப்பதோர் 70
ஆற்றற் சூழ்ச்சி யருமறை யுண்டெனத்
தேவி முதலா யாவிரு மகன்மினென்
றாய்மணி மாடத் தவ்விடத் தகன்று
திருமணக் கிழமைப் பெருமக ளுறையும்
பள்ளிப் பேரறை யுள்விளக் குறீஇ 75
மயிரினுந் தோலினு நூலினு மியன்ற
பயில்பூஞ் சேக்கையுட் பலரறி வின்றி
உழைக்கலச் சுற்றமு மொழித்தன னாகி
விழுத்தகு வெண்டுகில் விரித்தன னுடுத்துத்
தூய னாகி வாய்மொழி பயிற்றித் 80
தோட்டுணை மாதரை மீட்டனை பணியென
வாட்படை மறவன் காட்டிய வகைமேற்
சேட்புலம் பகலச் சிந்தை நீக்கி
வீணை கைவலத் திரீஇ விதியுளி
ஆணை வேந்த னமர்ந்தனன் றுயிலென். 85

4 6 பதுமாபதியை வஞ்சித்தது முற்றிற்று.