உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/5 1 வயாக் கேட்டது

விக்கிமூலம் இலிருந்து
(5 1 வயாக் கேட்டது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

ஐந்தாவது நரவாண காண்டம் 5 1 வயாக்கேட்டது

உதயணன் வணிகருடைய வழக்கைக் கேட்டலும் தீர்த்தலும்

[தொகு]

உதையண குமர னுவந்துண் டாடிச்
சிதைவில் போகமொடு செங்கோ லோச்சி
ஒழுகுங் காலை யோரிடத் தொருநாட்
கழிபெருங் கேள்விக் கண்போன் மக்களொடு
பேரத் தாணியுட் பொருந்தச் சென்றபின் 5
வாரமி லொழுக்கின் வணிக ரீண்டி
முறையொடு சென்று முறைமையிற் பிழையாக்
கறைதீர் செங்கோற் காவலற் கிசைந்து
முறையிது கேட்கெனக் கேட்பது விரும்பி
உருமண் ணுவாவினைப் பெருமகன் பணியா 10
வினாவவன் னாற்கு வினாவெதிர் வழாமை
மூவ ராவா ரொருமகற் கொருத்திகண்
மேவரத் தோன்றிய மக்களம் மூவரும்
ஆன்ற கேள்வியொ டறநெறி திரியார்
மூன்றுதிறம் பட்ட விருப்பின ரவருள் 15
எறிதிரை முந்நீ ரூடுசென் றவ்வழி
உறுவிலைப் பண்டத்தி னொருவன் வாழும்
கடையகத் திருந்துதன் னுடையது பெருக்கிப்
பிரிவிலன் வாழு மொருவ னொருவன்
அரிய பண்ட மெளிதி னடக்கியவை 20
உரிய காலத் துற்றது பகரும்
இன்னவை மற்றவ ரியற்கை முன்னோன்
பொலம்படு தீவிற்குக் கலந்தலைப் பெயர்ந்துழிச்
சூழ்வளி சுழற்ற வாழ்கயத் தழுந்தினன்
அழுந்தின னென்பது கேட்டே யறிவயர்ந் 25
தொழிந்த விருவரு முறுகடன் கழிப்பித்
தவ்வையைச் சேர்ந்து கவ்விதின் மொழியச்
சென்றது நின்றதுஞ் சிதைவின் றெண்ணி
நன்றுசேய் வாழ்க்கை யென்றெடுத் திற்றென
ஒன்று முரையா ளொருமைக் கோடலின் 30
வென்றித் தானை வீர வேந்தநின்
அடிநிழ லடைந்தன மதுவெங் குறையென
முடிவுநனி கேட்டலு முன்னோற் கமைந்த
கழிபெருங் காதலி மறுமொழி யெதுவெனச்
சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறல 35
உற்றவ ருரைத்தவை யொக்கு மவனொடு
சென்றோ ரொருவருஞ் சிதைகலத் துய்ந்து
வந்தோ ரில்லை மாந்தளிர் மேனிக்குக்
கருவு முண்டே திருவமர் மார்ப
தெய்வம்… 40
…படுத்த மாற்றமுந் தெளியாள்
ஐயத் துள்ளமொ டதுவும் படாளென
இருவர் மாற்றமுந் தெளிகவென் றேவலின்
உருமண் ணுவாவதற் குறுவழக் குரைத்தனன்
வருக வப்பொருள் வந்தபி னவ்வழி 45
இருவரு மிலைச்சித் தீரறு திங்கட்
கொருவன் கையகத் திருக்க விருந்தபின்
மிக்கோண் மாற்ற மெய்யெனின் மேலை
இயல்பே யாகு மதுதா னன்றி
மறுவில் கொள்கையோர் சிறுவனைப் பெறினே 50
உறுபொருண் மற்றிவ குரைக்கவும் பெறாஅர்
வெண்குடை நிழற்றிய வேந்தே பெண்பெறிற்
புறநடை யொழித்திவர் திறவதி னெய்துப
நூனெறி யிதுவென நுழைந்தவ னுரைத்தலும்
ஆனா வவரவ ரகத்திறத் தடைதர 55

உதயணன் மகப்பேறு விரும்பல்

[தொகு]

அவையம் போக்கி நவையறு நெஞ்சினன்
மக்க ளின்றெனின் மிக்குயர் சிறப்பின்
என்குல மிடையறு மெனநினைந் தாற்றான்
கொற்றத் தேவியைக் குறுகலு மவளும்

வாசவதத்தையின் செயல்

[தொகு]

பொற்றொடித் தோழியர் புரிந்துபுறங் காப்பத் 60
திருவொடு பூத்த நாள்வரை யிறந்தபின்
பெருவிற னோன்பிகட்குப் பெலிக்கொடை யாற்றி
ஆசிடைக் கிளவி யவரி னெய்தி
மாசில் கற்பின் மங்கலக் கோலமொ
டுருவமை மாடத் தோரிடத் திருந்தோள் 65
விரிகொடிப் பவழத்தின் விரிந்த சேவடிக்
காழகிற் புகைநிறங் கடுக்குந் தூவிப்
பல்சிறைப் புறவம் பரிந்துட னாடி
அவ்வாய்க் கொண்ட வாரிரை யமிழ்தம்
செவ்வாய்ப் பார்ப்பிற்குச் சேர்ந்தவண் ணொரிதலின் 70
உறுபசி வருத்தமு மன்பினது பெருமையும்
திறவதி னோக்கித் தெரியா நின்றுழி

உதயணன் செயல்

[தொகு]

வேந்தனும் வினவியவள் வேட்கை விரும்பித்
தாம்படு மாந்தர்க்குத் தண்ணீர் போலும்
காம்படு தோளியொடு கலந்துமகிழ் வெய்திய 75

உதயணன் கனவு காண்டல்

[தொகு]

துயிலிடை யாமத்துத் துளங்குபு தோன்றி
அயில்வே னெடுங்கணோ ராயிழை யணுகி
அருளு மெம்மிறை யெழுபுவி யளித்தற்குப்
பொருளு மதுவே போதுக வென்றலின்
யாரவன் கூறென வவ்வழி யிறைஞ்சிப் 80
பேரவ ளுரைத்தலிற் பெருமக னோக்கித்
துன்பமு யின்பமுந் துறக்க லாற்றா
மன்பெருந் தேவியொடு செலவுள மமர்தலின்
மற்றதை யுணர்த்தி முற்றிழை யெழுகெனப்
பற்றுந ளுடனே பறந்துவிசும் பிவர 85
மேலுங் கீழு மேவர நோக்கி
மாசறு மகளிர் மம்ம ரெய்தி
ஆனாக் கனவிடை மாநிதிக் கிழவன்
விளங்கவை நாப்பட் டுளங்கினர் புகுதலின்
அரிமா சுமந்த வமளி காட்டத் 90
திருமா ணாகத்துத் தேவியொ டேறி
இருந்த பொழுதிற் பொருந்திய வல்லியுள்
வெள்ளேறு கிடந்த வேண்டா மரைப்பூக்
கொள்வழி யெழுதிய கொடுஞ்சி யுடைத்தேர்ப்
பொன்னிய றொடரிற் புதல்வ னிருத்தலிற் 95
பின்னரப் பூவின் பிக்க நோக்கிப்
பிறழ்ந்த வாழியிற் பெருநடு வாக
உறழ்ந்துநனி யழுத்திய வுறுபொன் னல்லியின்
ஒருமுடி பிறழ்தலி னருமையொடு விரும்பிக்
கொண்டது வாவெனக் கோமகள் கொண்டு 100
வண்டவிழ் நறுந்தார் வத்தவற் கருளி
நெடித்தனெ னெழுகென விடுத்தனள் போகக்
கொடிக்கோ சம்பி குறுகித் தமரிடை
முடிக்கல மெல்லா முறைமையி னோக்கிக்
கைவினைக் கம்மத்துக் கதிர்ப்புநனி புகழ்ந்து 105
வேண்டுக விதுவென விளங்கிழைக் கோமகட்
கீயக் கொண்டுதன் னிடைமுலைச் சேர்த்தலும்
காய்கதிர்க் கனலியிற் கதுமெனப் போழ்ந்து
புக்கது வீழ்தலும் பொருக்கென வெரீஇ
எழுந்த மாதரொ டிறைவனு மேற்றுக் 110

உதயணன் கனாப்பயனறிதல்

[தொகு]

கழிந்த கங்குற் கனவினை வியந்து
நூனெறி மரபின் வல்லோர் பேணிக்
கோலத் தேவியொடு கோமகன் வினவக்
கனவது விழுப்ப மனவயி னாய்ந்து
விளங்கொளி விஞ்சையர் வெள்ளியம் பெருமலைத் 115
துளங்கா வாழி தோன்ற வேந்தும்
வெய்யோற் பெறுதலும் விறலவ னெய்தலும்
ஐய மில்லையென் றாய்ந்தவ னுரைப்பப்
புதல்வனஃ தெதிர்மை பொருளென விரும்பித்
திதலை யல்குற் றேவியொடு மகிழ்ந்து 120
செல்லா நின்ற சின்னா ளெல்லையுட்

வாசவதத்தையின் கருப்பம்

[தொகு]

பல்கதிர் மதியமொடு பரந்துவிசும் போடும்
வியந்த நற்கோ ளுயர்ந்துழி நோக்கிப்
பெயர்ந்துவரு நாளிற் பெருமையின் வழாத
நன்னா ளமயத்து மின்னென நுடங்கி 125
விஞ்சைய ராழி யுருட்டும் வேட்கையொ
டஞ்செந் தாமரை யகவயி னிறைந்த
வெண்பாற் புள்ளின் விழையுந் தன்மையொ
டவந்தியன் மடமக ளணிவயிற் றங்கண்
வியந்துதலை பனிக்கும் வென்றி வேட்கையொடு 130
சேட்படு விசும்பிற் சென்றவ னவ்வழிப்
போய்ப்படு குருசில் பொலிவொடு பட்டென
முயக்கமை வில்லா நயப்புறு புணர்ச்சியுள்
அணிநிற வனிச்சம் பிணியவிழ்ந் தலர்ந்த
அந்த ணறுமல ரயர்ப்பிற் றாங்கும் 135
செந்தளிர் … வருந்த வசாஅய்
நிலாவுறழ் பூந்துகின் ஞெகிழ்ந்திடைத் தோன்றக்
கலாவப் பல்காழ் கச்சுவிரிந் திலங்கத்
திருநுதற் றிலகமுஞ் சுமத்த லாற்றாள்

வாசவதத்தை ஒரு கனவுகண்டு அரசனுக்கு உரைத்தல்

[தொகு]

பெருமதர் மழைக்க ணின்றுயில் பேணிய 140
இன்ப யாம மியைந்த வைகறை
நன்பெருங் கனவி னடுங்குவன ளேற்று
வெள்ளத் தானை வியலக வேந்தன்
பள்ளி யேற்றபின் பதனறிந்து வணங்கி
என்னைகொ லடிக ளின்றியான் கண்டது 145
விண்ணக மருங்கில் வெண்முகில் புரைவதோர்
ஆண்ணல் யானையென் கண்ணுற வந்துதன்
ஆய்வலித் தடக்கை சுருட்டுபு முறுக்கியென்
வாய்புக் கடங்கிய பொழுதிற் சேய்நின்
றந்தர மருங்கிற் றுந்துபி கறங்கப் 150
புகழ்ந்துபல ரேத்தப் பொருக்கெனப் பெயர்த்தே
உமிழ்ந்தனெ னுமிழப் பரந்திறகு தோற்றிப்
பல்லோர் மருளப் பறந்துசென் றுயர்ந்ததோர்
வெண்மலை மீமிசை யேறி வேட்கையின்
விண்மிசை ஞாயிறு விழுங்கக் கண்டனென் 155
என்னைகொ லிதனது பயமென வினவிய
நன்னுதல் கேட்ப மன்னவ னுரைக்கும்

கனவின் பயனை உதயணன் கூறல்

[தொகு]

மறுவின்று விளங்கு மறப்போ ராற்றலோர்
சிறுவனைப் பெறுதி சேயிழை மற்றவன்
உறுதிரைப் பக்கமும் வானமும் போகி 160
அச்சமி லாற்றலோர் விச்சா தரரிடை
ஆழி யுருட்டுமென் றறிந்தோ ருரைத்த
வீழா விழுப்பொருண் மெய்பெறக் கண்டனை
தீதின் றாகித் திருவொடு புணர்கென
மாதாங்கு குருசிலு மதுவே யிறுப்பப் 165
போதேர் கண்ணியும் புகன்றன ளொழுக

வாசவதத்தையின் கருப்பம் முதிர்தல்

[தொகு]

மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும்
பொங்குநீர்ப் பொய்கையிற் பூவே போலவும்
நாளினு நாளினு நந்திவனப் பெய்தித்
தோளுந் தாளு முடம்புந் தலையும் 170
உகிரு மயிரு மொருங்குகுறை வின்றி
ஓதிய வனப்போ டுயர்நெறி முற்றி
அருவினை விச்சை யவனூ டுறைதலிற்
பெருமலை யுலகம் பேணு மவாவொடு
புறத்த லூற்றம் பிறப்பப் பைம்பூட் 175
சிறப்பொடு புணர்ந்த சேயிழை மாதர்
குடர்வயிற் கிடந்த குழவிய துள்ளத்
திடர்வகை யறியா ளெவ்வ மெய்தி
உணர்ந்தோ ருரைப்ப வுரையிற் கேட்கும்

வாசவதத்தைக்கு உண்டான விருப்பம்

[தொகு]

இருவகை யிமயமும் பெருகுபுனல் யாறும் 180
நீலப் பருப்பமுந் தீபமு மப்பாற்
கோல வருவியஞ் சிகரியு ஞாலத்
தொருநடு வாகிய வுயர்பெருங் குன்றமும்
பெருமலை பிறவு மருமையொடு புணர்ந்த
இறுவரை யேறி யிமையோ ராடும் 185
நறுமலர்ப் பொய்கையு நந்தா வனமும்
உத்தர குருவினோ டொத்தவை பிறவும்
ஆண்டுபோந் தெழுந்து காண்டலுற விழையா
ஐவகைச் சோதிட ரணிபெறு கற்பம்
கைவைத் தொழியக் கடந்துசென் றுப்பால் 190
அமரா பதியு மந்தரத் தெல்லையும்
நுகர்பூங் காவு நோக்குபு வருதற்
குற்றதென் மனனெனு முணர்வின ளாகி
மற்றுப்பிறர்க் குரையாண் மனத்தே யடக்கி
ஈர்க்கொடு பிறந்த விளந்தளிர் போல 195
மாக்கே ழாகமு மருங்குலும் வருந்த
முலைக்கண் மறுப்பத் தலைக்கவி னெய்தி
வளம்பாற் றன்மையின் வந்துபுடை யடுத்த
இளம்பாற் கெதிர்ந்த விடத்த வாகிய
முலைபொறை யாற்றா முனிவின் றலையும் 200
மலைபொறுத் தென்ன மகனையுந் தாங்கி
நொந்துபுற மெலிந்த தன்றியு மந்தரத்
தியங்கல் வேட்கைய னிருக்குந னாதலின்
அயங்கவ னழற்ற வசைவு முந்துறீஇ
முக்கூட் டரத்த வொண்பசை விலங்கி 205
நெய்கூட் டிலங்கு நித்தில நிகர்த்துக்
கூரிய வாகிய நேரியன் முறுவற்
செவ்வாய் திறந்து சில்லென மிழற்ற
ஐதேந் தல்குலு மாகமு மசைஇ
மைதோய் கண்ணி மதியின் மெலியப் 210

உதயணன் வாசவதத்தையின் விருப்பத்தை வினாவல்

[தொகு]

பசைவுறு காதற் பட்டத் தேவி
அசைவுறு வெந்நோ யறிந்த வரசன்
அசாஅ வரும்பொருள் யாதென வுசாஅய்க்
கேட்பவஃ துரையாள் வேட்பது விளம்பின்
நயந்தோர்க் காயினு நாணுத்தக் கன்றென 215
உயர்ந்தோர் கொள்கையி னொண்டொடி யொதுங்க
மன்னவன் மறுத்து மடவோய் மற்று
…….
நின்னுயிர் மதியா யாயி னென்னுயிர்
யானும் வேண்டே னாயிழை கேண்மோ
கூடிய கொழுநன் கொழுங்குடர் மிசைகுற 220
ஓடிய வுள்ளத் துயர்துணைத் தேவியைக்
குறையிற் கேட்டுக் கொடுத்துநோய் தணித்த
மறையில் பெரும்புகழ் மன்னவன் போல
என்ன தாயினு மீகுவன் மற்றுநின்
இன்னா வெந்நோ யெத்திறத் தாயினும் 225
ஒடுங்கா வுள்ளமொ டகற்றுவல் யானெனக்
கடுஞ்சூ ளறைஇக் காவலன் கேட்ப

வாசவதத்தை தன் விருப்பத்தைக் கூறல்

[தொகு]

ஒழுங்கினுங் கற்பினு மிழுக்க மின்றெனப்
பசைஇய கேள்வனைப் பைந்தொடி வணங்கி
அசையா வூக்கத் தடிகளென் னுள்ளம் 230
விசைகொ ணோன்றாள் விச்சா தரர்போல்
மிசையே சென்றுற மேன்மே னெருங்கும்
இசையா வரும்பொரு ளிற்றென வுரைத்தல்
வசைதீர் வையத்து நகைய தாதலிற்
சொல்லிய திலனென மெல்லியன் மிழற்ற 235

உதயணன் அமைச்சரோடு ஆராய்தல்

[தொகு]

எளிதெனக் கென்ன வமைச்சரோ டாராய்ந்
தொளிமலர்க் கோதா யுற்றபி ன்றியெனத்
துன்ப நீக்குந் தோழரோ டியைந்தே
இன்பக் கோட்டியு னினிதி னிருந்து
பேராக் கழற்காற் பெருந்தகை வேந்தன் 240
ஆர்வவேய்த் தோளி யசாநோய் தீரிய
ஆராய்ந் தனனா லமைச்சரோ டொருங்கென்.

5 1 வயாக் கேட்டது முற்றிற்று.