பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


1. வானநூலறிவு

பண்டையோர் வானநூல் துறையில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களால் அறிகின்றோம். விண்ணில் மதி செல்லும் வழியாகிய வட்டத்தை இருபத்தேழு பிரிவுகளாய்ப் பிரித்து, அப்பிரிவுகளை அறிந்து கொள்ளும் அடையாளமாய் “எறிகடல் ஏழின் மணல் அளவாக”வுள்ள விண்மீன்களுள் இருபத்தேழு விண்மீன் தொகுதிகளைக் குறித்து அமைத்தனர், பண்டைய அறிஞர்கள். புறநானூற்றில் "மதி சேர் நாண்மீன் போல்”[1] என வரும் சொற்றொடருக்கு உரையாசிரியர் திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனையொப்ப எனக் கூறும் உரையால் இதனையறியலாம். குமணனின் வள்ளன்மையை விளக்க வந்த இடத்தில் வருவது இது, பொன்னால் செய்யப்பெற்ற நன்கலத்தில் உணவும், அதனைச் கற்றி வைக்கப்பெற்ற வெள்ளியால் செய்யப்பெற்ற பல சிறு சிறு கலங்களில் கறியமுதும் படைக்கப்பெற்றதாய் விளக்குவார், பெருஞ் சித்திரனார். தொண்டைமான் இளத்திரையன் விருத்தோம்பலைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

"மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி
முகனமர்ந்து ஆனா விருப்பிற் றானின் றூட்டி
மங்கும் வானத்துத் திங்கள் எங்கும்”[2]

என்று விளக்குவர்.

கோள்களின் இயக்கத்தால் இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். வெள்ளி என்பது ஒரு மழைக்கோள். அது தெற்கே விலகியிருப்பது மழை இல்லாமைக்கு அறிகுறி என்னும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

“வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை”[3]


  1. 3 புறம் - 160, அடி-8.

  2. 4 பெரும்பாண். அடி - 477 - 480.
  3. 5. புறம் - 388, அடி 1-2