பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


 கோணப்பகுதி (Sector) எனப்படும். இந்தப் பகுதியில் 30° க்கு நேராயுள்ள வில் (Arc) பகுதி சூரியன் செல்லும் பாதையாகும். இதனைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பன்னிரண்டு பகுதிகளையும் கடக்க ஓராண்டு காலமாகின்றது. இந்த அடிப்படையில் சித்திரை மாதத்தில் சூரியன் மேடத்தில் இருப்பார்: பங்குனி மாதத்தில் அவர் மீனத்தில் இருப்பார். ஒவ்வொரு கோளும் (திங்கள், செவ்வாய், புதன் முதலியவை)14[1] பூமியைச் சுற்றி வர வேறு வேறு காலங்கள் ஆகும். சூரியன் பூமியைச் சுற்றி வர ஓராண்டு காலம் ஆவதைப் போலச் சனி, ஒரு சுற்று சுற்றி முடிக்க முப்பது ஆண்டு காலம் ஆகும். ஆகவே சனி ஒவ்வொரு வீட்டிலும் இரண்டரை ஆண்டு இருப்பார். ஒருவர் பிறக்கும்போது சூரியன் இருக்கும் இடம் ஜன்ம லக்னம் ஆகும். சந்திரன் இருக்கும் வீடு இராசி லக்னம் (கோசார முறையில்) எனப்படும். இராசி லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சனி இருப்பின் அஃது அஷ்டமத்துச்சனி பிடித்ததாய்ச் சொல்லுவர். இஃது இரண்டரை ஆண்டு காலமாகும். இராசிலக்னத்திற்கு முன்வீட்டிலும், இராசிலக்னத்திலும், இராசி லக்னத்திற்குப் பின்வீட்டிலும் சனி இருக்கும் காலம் ஏழரையாட்டைச் சனி என்று வழங்குவர். நளனுக்குப் பிடித்தது ஏழரையாட்டுச்சனி என்பது கதை. இவற்றிற்கெல்லாம். சோதிடக் கலையின் அடிப்படையில் பலன் சொல்லப்படும்.

கலிலியோவிற்குப் பின் வந்த கோப்பர்னிகஸ் என்ற அறிவியலறிஞர், பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று மெய்ப்பித்தார். ஆகவே, பூமி செல்லும் பாதையே இராசி மண்டலமாகிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஓராண்டு காலம் ஆகின்றது. பூமி சூரியனைச் சுற்றிவரும்போது பூமியைச் சுற்றி வரும் சந்திரனும் சேர்ந்து சூரியனைச் சுற்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தில் சந்திரன் பூமியைப் பன்னிரண்டு முறை சுற்றுகின்றது. சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வரும் காலத்தை மாதம் என்று வழங்குகின்றோம். பூமி தன்னைத் தானேயும் சுற்றிக்கொண்டுள்ளது. இவ்வாறு சுற்றும் காலம் ஒரு நாள் ஆகும். பூமி சூரியனை நோக்கியிருக்கும் பகுதி பகல்; நோக்காதிருக்கும் பகுதி இரவு. .


  1. 14 கோள்களின் பெயரையே நாள்களின் பெயராய் அமைத்தனர்.