பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

21


பல்வேறு அண்டங்களை இயங்கச்செய்கின்றார். இத்தகைய கோலத்தை அமைத்த இறைவனைக் காளிதேவியாகக் காண்கின்றார். 'சக்திதாசன்' என்றும் தம்மைக் கருதிக்கொள்ளுகின்றார். கவிஞர். புறமுக ஆற்றல் (Centrifugal force) என்ற இறைவனது ஆணையால் இக்கோள்கள் - அண்டங்கள் - வழி விலகாமல் சுற்றி வந்துகொண்டுள்ளன. ஒவ்வொரு கோள்களுக்கும் இடையிலும் பல்லாயிரக்கணக்கான மைல் இடை வெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் சில சமயம் வால்மீன்களையும் (Comets), வீழ்கொள்ளி அல்லது எரிமீன்களையும் (Meteors) காண்கின்றோம்.

இங்ஙனம் அண்டங்கள் விண்வெளியில் வெவ்வேறு வேகத்தில் சுழன்றுகொண்டும், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டும் உள்ள உண்மையை ஆண்டவனின், 'அலகிலா விளையாட்டாய்க்' கொள்வர், திரி கூட இராசப்பக் கவிராயர். சாட்டைத் துணையின்றியே இத்தனை அண்டங்களையும் பம்பரம்போல் ஆட்டி வைக்கின்றான் இறைவன் என்று காட்டுவர், அக்கவிஞர்.

"சாட்டிநிற்கும் அண்டமெலாம்
சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து
அண்ணவார்..29

என்று அழகாய்க் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம்.

பேராசிரியர் ஐன்ஸ்டைன் இந்த அகிலத்தின் வெளி வளைந்துள்ளது என்றும், அது விரிந்துகொண்டே போகின்றது என்றும் கூறுவார். இஃது ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயம் மிகப்பெரியது என்றும், அதனுள்தான் ஏனைய பூதங்கள் அடங்கியுள்ளன என்றும் பண்டையோர் கூறும் கருத்துக்கு இவ்விளக்கம் ஒருபுடையொத்துள்ளது. ஓர் இரப்பர் பலூன் மேல் பல புள்ளிகளை வரைந்து, அப்பலூனை ஊதினால் அது பெரிதாக ஆக ஆக அப்புள்ளிகளின் இடையிட்ட தூரமும் அகன்றுவிடுகின்றது. இதைப்போல், விண்வெளியும் விண்மீன் மண்டலங்களை ஏந்திக்கொண்டு அகன்றுகொண்டே போகின்றது என்பது இன்றைய அறிவியலார் கண்ட முடிவு. இதைப் போன்ற பலவான நூற்கருத்துகளைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.


29. குற்றாலக் குறவஞ்சி - 107