பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


சக்கரம்.41[1] இதுவே ஞாலத்திகிரி, முதுநீர்த்தி கிரி முதலானவற்றை இயக்கும் ஓர் அற்புதத்திகிரி. மிகப்பெரியதோர் ஆலமரத்தை - அடையாறு ஆலமரம் போன்றதோர் ஆலமரத்தைக் கவனிப்போம். அதற்கு 200க்கு மேற்பட்ட வயது இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்னர் அது ‘தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதையில்’ ஒளிந்துகொண்டிருந்தது. ‘ஆலமர் வித்தின் அருங்குறள்’ போல் ஒளிந்துகொண்டிருந்தது என்றும் சொல்லிவைக்கலாம். காலச் சக்கரம் சுழன்று சுழன்று, விதையில் ஒளிந்துகொண்டிருந்த ஆலமரத்தை மெல்ல மெல்ல இழுத்து வெளிக் கொணர்ந்துவிட்டது. இந்த அகிலத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் யாவுமே காலச்சக்கரத்தின் சுழற்சியால் வெளி வந்தவைதாம்.

இந்தக் கருத்தைத் தெளிவாய் விளக்க இன்னொரு கருத்தைக் காட்டுவேன். சென்னையிலிருந்து நெல்லைக்குப் போகின்றோம். வழியில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய நகர்கள் வருகின்றன. இவையாவும் முன்னமேயே இருந்த நகர்கள்தாம். இடத்தை விட்டு இடம் பயணம் செய்யும்போது முன்னமேயே இருந்த ஊர்களைத்தாம் சந்திக்கின்றோம். நம் வாழ்க்கையில் இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் நிகழப்போகும் நிகழ்ச்சிகளும் நிகழ்பவை அல்ல. 150 கி.மீ.க்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் விழுப்புரத்தைப் போல, 330 கி.மீ. க்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் திருச்சியைப் போல, 400 கி.மீ.க்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் மதுரையைப் போல, 560 கி.மீக்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் திருநெல்வேலியைப் போல, இருபது ஆண்டுகளுக்கு அப்பால் கால மண்டலத்தில் அந்நிகழ்ச்சிகள் இருந்துகொண்டுள்ளன! தூரம் என்ற திரை இந்த நான்கு நகர்களையும் மறைத்துக் கொண்டிருப்பதுபோல, காலம் என்ற திரை இந்நிகழ்ச்சிகளை மறைத்துக்கொண்டுள்ளது. இந்த உண்மையை வேறு விதமாகவும் கூறலாம். காலம் என்ற வாகனத்தில் நாம் பயணம் செய்யும்போது முன்னமே இருந்துகொண்டிருக்கும் அந்நிகழ்ச்சிகளை நாம் சந்திக்கின்றோம். இடப்பயணத்தில் நாம் இந்த நான்கு நகரங்களையும் சந்திப்பது போல, காலம் என்ற தத்துவம் எல்லா நிகழ்ச்சிகளையும் பூத்து விரியச்


  1. 41. இதுவே வைணவ தத்துவத்தின் அசித்தின் ஒரு பகுதியான காலதத்துவம்; இது சத்துவசூனியம் என்றும் வழங்கப்பெறும்.