பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பேசினாள்; சத்தம் கொடுத்துப் பேசினாள். யாரிடம்...? அவளது மனச்சாட்சியிடம் தானா?

புதுக்கோட்டையில் கீழ ராஜவீதியில் அந்த மாளிகையில் அன்று முழங்கிய கெட்டி மேளம் இன்றும் முழங்குகிறது. மனம் தடுமாறுகிறது. தடுமாற்றம் அரைக்கணம்தான் நீடித்தது. அவள் பொதுநலப் பணிக்குத் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவள் இல்லையா? “பார்த்துக்குங்க, தமிழரசி. எனக்கு ஜி. எச். போக நேரமாயிட்டுது!” அவள் இப்போது டாக்டர் ரேவதி.

“மிஸ்டர்...மிஸ்டர் ஞானசீலன்! ஏன் இப்படி ஆயிட்டீங்க...? நாதியத்துப் போயிட்ட மாதிரி ஆகிட்டீங்க?”-தயங்கியவள், புறப்பட்டாள். போலித்தனமான மிடுக்குடன் புறப்பட்டாள்.

வெடித்த விம்மலை நாசுக்காகவும், நாகரிகமாகவும் கட்டுப்படுத்தியவாறு, தலையை நிமிர்த்தினாள், ரேவதி. சலனம் கண்ட உணர்வுகளைக் கண் காணாமல் சமனப்படுத்திக் கொண்டு நாடிக் குழலை எடுத்தாள்: இனம் புரிந்த தவிப்புடன் நோயாளியைப் பரிசோதனை செய்தாள். நெஞ்சம் தழதழக்கின்றது; என்னவோ பழைய ஞாபகத்தில், கழுத்துச் சங்கிலியை நெருடி விட்டாள்; நெஞ்சில் முடிச்சுப் போட்டிருந்த ‘நிரடல்’ அவிழாதோ?

தொலைபேசி கூட ஏழரைக் கட்டைச் சுருதியில் அலறியது.

தொண்டையை கனைத்துக் கொண்டே "அலோ...! டாக்டர் ரேவதி பேசுகிறேன்..." என்றாள்.

எதிர்முனையில், “அலோ...அலோ!” என்ற குரல் மாத்திரம்தான் கேட்டது; பேச்சு எதுவும் தொடரக் காணோம்.

நான்கைந்து வினாடிகள் நழுவின.