பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஆழ்கடலில்


கின்றனர். அரசன், இறைவன், வேந்தன், மன்னன் என்றாலும் அதே பொருளே!

இனி இக்குறளின் உட்பொருளை நோக்குவாம்:

படை:- அரசனுக்குப் படைவேண்டும். படையின்றி ஆட்சியில்லை. சுற்றி வளைக்காமல் துணிவுடன் சுருக்கமாகச் சொல்லின், நாட்டை ஆள்வது படைதான். சான்று, இக்காலப் படைப் (இராணுவப்) புரட்சியே. படை, அன்று யானை, குதிரை, தேர், காலாள் என்பன. இன்றோ தரைப்படை, கடல்படை, வானப்படை என்பன. அன்று வில், வாள், வேல் முதலியன. இன்றோ குண்டு விகற்பங்கள், இப்படைகளைத் தன் உடைமையாக உடையவன் அரசன் என்பது குறள். படைகளுக்குப் பணிபவனோ, அல்லது பிறவல்லரசுகளிடமிருந்து பிச்சையாகப் படைகளைப் பெறு பவனோ அரசனாகான்.

அடுத்தது குடி குடிமக்கள் இல்லாத அரசும் உண்டா? இதையும் வள்ளுவர் கூறவேண்டுமா? இங்கே இரண்டினை ஊன்றி நோக்கவேண்டும். மேல் நாட்டினர் மக்கள் தொகையைப் பெருக்க ஊக்கம் அளிப்பது ஏன்? ஒரு நாட்டிற்கு மக்கள் வளம்-மக்கட் செல்வம் வேண்டும். அடுத்து, ஒரு நாட்டின் குடிகள், பிறநாட்டிடம்-பிறநாட்டுத் தலைவரிடம் உயிரை வைத்துக் கொண்டிருந்தால் சொந்த நாடு உருப்படுமா? அவர்கள் பிறந்த நாட்டின் குடிகளாவாரா? உடைமையாவாரா? எனவே, நாட்டுப்பற்றுடைய மக்களை அரசன் உடைமையாகப் பெற்றிருக்க வேண்டும்.

அடுத்தது கூழ் - உணவுப் பொருள்: தன் மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் முழுவதும் உடையவனே அரசன் , பிறரிடம் கப்பல் கப்பலாய்க் கையேந்துபவன் அரசனல்லன். பின்னர் அமைச்சு: அறிவுரை வழங்கி ஆட்சியைக் கவனிக்கும் அமைச்சர்கள் தேவைதானே!