26இருட்டு ராஜா
வான். அவதான் போயி அழுது கெஞ்சிக் கும்பிட்டு அவனை மீட்டுக்கிட்டு வருவா. அவன் கேட்டபோதெல்லாம் பணம் கொடுப்பா. கடன் வாங்கியும், பண்டம் பாத்திரங்களை அடகு வச்சும் நகைகளை வித்தும், ஹும், எவ்வளவு பணம் கொடுத்திருக்கா. அவ்வளவையும் நாசமாக்கிப் போட்டானே இந்தக் கரிக்கொல்லன்!”
“அம்மா, அளவு மீறினால் அமுதமும் நஞ்சாகும். அன்பு கூட ரொம்ப அதிகமாகி விட்டால், ஆளைக் கெடுத்துப்போடும்” என்றான் தங்கராசு.
“பெத்தவ மனம் பிள்ளைகளுக்கு எங்கே புரியுது? எந்த மகன்தான் அம்மாவின் உள்ளத்தை சரியாகப் புரிஞ்சுக்கிடுதான்?” என்று பொதுவான புலம்பல் ஒன்றைப் புலம்பி வைத்தாள் அம்மாக்காரி.
மகன் மவுனமாகச் சிரித்துக் கொண்டான்.
மீண்டும் அம்மாவே தொடர்ந்தாள்: ‘வடிவுக்கு வாழ் நாளிலும் அமைதியில்லைன்னு போச்சு, சாவிலும் அமைதியில்லாமப் போச்சு. மகன் எப்படிப் பிழைக்கப் போறானோ என்ற கவலையினாலேயே அவ துடிச்சுக் கிட்டுக் கிடந்தா. அவ சாகிறவரையாது இந்த முடிவான் வீட்டோடு கிடக்கப்படாதா? அவளுக்கு இழுத்துக் கிட்டு கிடக்கு. இவன் குடிச்சிக்கிட்டும் சண்டை பிடிச்சிக் கிட்டும் அலைஞ்சான். சரி, உசிரு ஒருமட்டும் உடலை விட்டுப்போச்சு. உடலை நிம்மதியா சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப் போக முடிஞ்சுதா? அவ தலையெழுத்து! ஊம். யாராரு என்ன என்ன அனுபவிக்கணும்னு விதிச்சிருக்கோ, அதை அனுபவிச்சுத்தானே தீரனும்”
“ஏன், என்ன நடந்தது?” என்று ஆவல் தூண்டப் பெற்றவனாய் அவன் கேட்டான்.