22
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் தான் இளைஞர்கள் வளரவும் வாழவும் முடிந்தது. தாய் அன்பு அவர்களுக்கு இல்லை. தாய் நாட்டு அன்புதான், தழைத் தோங்கி நின்றது. தலை தூக்கி இருந்தது. அவர்கள் தாய்க்கு நல்ல மகனாக இருக்கவில்லை. தாய் நாட்டுக்கு நல்ல வீரனாகத்தான் விளங்க முடிந்தது.
அந்த நாட்டு இளைஞர்கள் ஆசிரியர்களாகவும் ஆசிரிய மாணவர்களாகவுமே வாழ்ந்து போனார்கள். இந்த நிலை கி.மு. 800 ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 700ம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது.
ஸ்ப்பார்ட்டாவின் பெண்கள்
கிரேக்க நாட்டின் மற்ற நகரத்துப் பெண்களை, தனிமைப்படுத்தி, வைக்கப்பட்டிருந்த அதே காலகட்டத்தில், ஸ்பார்ட்டா நகரப் பெண்கள் சகல உரிமைகளும் பெற்று, சுதந்திரமாக உலாவரும் சந்தர்ப்பம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆண்கள் செய்த ஒட்டம், தாண்டல், கனப்பொருட்கள் தூக்கியெறிதல், வேல் எறிதல், நீந்துதல், மல்யுத்தம் புரிதல் போன்ற எல்லாப் பயிற்சிகளையும் பெண்களும் செய்தனர். அதற்காக, அவர்களுக்கென்று தனியாக பயிற்சி மைதானங்கள் அமைந்திருந்தன.
ஜிம்னாஸ் டிக் நடனம், திருவிழா நடனம் இராணுவ நடனம் போன்ற நாட்டிய நேரங்களில், ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் ஆடினர்.
அவர்களது பயிற்சி கால வாழ்க்கை 20 வயது வந்ததும் நிறுத்தப்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். திருமணம் நடைபெற்றவுடன், அவர்கள் பொது இடங்களில் பயிற்சிகள் செய்வதை விட்டு விட்டார்கள்.