16 ✲ ராதை சிரித்தாள்
வல்லிக்கண்ணன்
அவளை ஆட்டி வைத்த பருவத்தின் பிசகு அவனையும் உலுக்கி யிருக்கும். அதற்குள்ளாக 'ராதா, ராதா' என்று வெளியே தெருவாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மறுபடியும் ஒலித்தது அந்த அழைப்பு.
ராதையின் கைகள் நழுவி விழுந்தன. 'இது நல்லாவேயில்லை, ராதா இப்படியா புத்திகெட்டுப் போறது! என்று எச்சரித்து விட்டு வேகமாக நடந்து தனது வீட்டுள் புகுந்து மறைந்தான் அவன்.
வெளி வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. 'என்ன செஞ்சுக்கிட்டிருந்தே கூப்பிடக் கூப்பிட ஏன்னு கேளாமல்?' என்று கேட்ட தாயின் குரலும், 'குளிச்சுத் தலைதுவட்டிக்கிட்டு நின்னேன். சேலையைப் புழிஞ்சு கட்டிக்கிட்டுத் தானே வர முடியும்' என்ற மகளின் குரலும் அவன் காதில் விழுந்தன.
அவன் நெஞ்சு 'திக்திக்' கென்று அடித்துக் கொண்டிருந்தது. 'என்ன துணிச்சல்!....வயது வந்த புள்ளெயை வருஷக் கணக்காக வீட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருந்தால் இப்படித்தான். காலாகாலத்திலே எவனுக்காவது கட்டிக் கொடுத்து அனுப்பாமல், தாய் தகப்பன் மாரு மட்டும் குஷாலா யிருந்தால், மகள் தனக்கு வழி தேடத் தானே துணிஞ்சிட்டுப் போறா!' என்று எண்ணினான்.
'சே' வீணாக் கெட்டபெயரு எதுக்காக ஏற்கணும்? சங்கரன் பிள்ளைக்குத் தெரிஞ்சால் அவரு மகளை நான்தான் கெடுத்து விட்டேன்னு கோபிப்பாரு! பொதுவாக ஊரிலே நடப்பதே இதுதானே. பெண்கள் துணிந்து ஒரு காரியத்தைச் செய்து போட்டாலும் கூட, பழி ஆண்கள் மேலேதானே விழுது... நாளைக்கே நான் ஊர் சுற்றப் போக வேண்டியது தான். இந்தப் பெண் கல்யாணமாகிப் புருஷன் வீடுபோய்ச் சேர்ந்தாள்னு தெரிஞ்சதும்தான் திரும்பனும். திரும்பவும் இதுமாதிரி விபரீதத்துக்கு இடமேற்படப்படாது' என்று தீர்மானித்துக் கொண்டான்.
ராதையும் அவள் தாயும் அவர்கள் வீட்டு அடுப்பங்கரைக்குப் போய்விட்டார்கள் என்று தெரிந்ததும், மெதுவாக தன் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு, தெருவாசல் கதவையும் இழுத்துச் சார்த்திவிட்டு வெளியேறினான். ராதையை அவன் திரும்பப் பார்க்க விரும்பவே இல்லை.