30 ✲ குமாரி செல்வா
வல்லிக்கண்ணன்
'அது தவறு என்றால், உள்ள அளவை நீங்களே சொல்லி விடுங்கள். அடுத்த இதழில் திருத்தம் எழுதி விடுகிறேன். இதற்காக நீங்கள் இப்படி....'
'அவசியம் திருத்தம் வெளியிட்டே ஆகணும். அதற்கு நீங்களே சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது நல்லது'.
'நீங்கள் சொன்னாலே போதும். ஏதோ கைத்தவறுதல், அச்சுப் பிழை, கவனக் குறைவு, ஞாபக மறதி போன்ற காரணத்தினாலே...'
'மீண்டும் தவறு ஏற்படாமலிருப்பதற்காகவே நீங்கள் அளந்து சரிபார்க்க வேண்டும் என்கிறேன். உம். சிக்கிரம் ஸார் எனக்கு நேரமில்லை. வேறு அலுவல்கள் இருக்கின்றன, போக வேண்டும்' என அவசரப்படுத்தினாள் அலங்காரி.
தலையைச் சொரிந்த ஆசிரியர், தட்டிக் கழிக்க ஒரு காரணம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து, 'இங்கே டேப் இல்லை. அளக்க முடியாதே!' என்றார். அது அற்பாயுள் சந்தோஷமாக முடிந்தது.
'டேப் வேண்டாமே. இதோ ஸ்கேல் இருக்கு. நூல் இருக்கு. நூலை இடையைச் சுற்றிப்பிடித்து அளந்து அப்புறம் புட்ரூலில் கணக்குப் பண்ண முடியுமே!’ என்று வழி வகுத்துக் கொடுத்தாள் யுவதி.
பரமசிவம் பாடு பரம சங்கடமாகிவிட்டது. பலத்த தயக்கத்திற்குப் பிறகு துணிந்து விட்டார் அவர். அவள் சொன்னபடியே நூலினால் அவளது இடையின் அளவைக் கணித்தார். விரல்கள் நடுங்க, கைகள் பதற அவர் வெள்ளிய நூலை அந்தப் பாவாடை அழகியின் இடையளவு காணச் சுற்றும்போது, அவள் ஆடைகளும் உடலும் எழுப்பிய சுகந்த மணமும், பெண்மையின் அருகாமையும், அந்தப் புது அனுபவமும் அவர் உள்ளத்திலே கிளறிய உணர்ச்சிகள் தனிரக அவியலேயாகும்.
ஒரு மாதிரியாக அவர் கணக்கெடுப்பை முடித்ததும் 'உம். எவ்வளவு?' என்று கேட்டாள் அவள்.
'21 1/4 அங்குலம்' என்று மென்று விழுங்கினார் அவர். 'பத்திரிகையிலே பிசகாக....'