உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

25

நிறுவனம் வணிகரிடையே சிக்கித் தவித்தது. அதே நேரத்தில் சுதேசிகளை நம்பி வெள்ளை நிறுவனத்தைப் பகைத்துக் கொண்ட வணிகர்கள் திகைத்தார்கள்.

இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் சிதம்பரனார் உள்ளம் கலங்கவில்லை. உடனே அவர் இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றார். அங்கே உள்ள கப்பல் கம்பெனி ஒன்றில், கப்பலைக் குத்தகைக்குப் பேசி தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தார். இதனைக் கண்ட தமிழ் வியாபாரிகள் சிதம்பரனார் சாதனையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

சொந்தமாகக் கப்பல் இல்லாமல் வெள்ளையர்கள் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து வாணிகம் நடத்திட முடியாது என்பதைச் சிதம்பரனார் உணர்ந்தார். அதனால், புதிய கப்பல்களை வாங்கிட அவர் பணம் திரட்டினார். துத்துக்குடி வணிகர்கள் முடிந்த அளவுக்கு சுதேசிக்கப்பல் கம்பெனிக்குப் பண உதவிதளைச் செய்தார்கள். ஆனால், அந்த நிதியுதவி கப்பல் வாங்கப் போதுமானதாக இருக்கவில்லை.

பம்பாய், கல்கத்தா போன்ற மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று எப்படியெல்லாம் யார் யாரைப் பிடித்துப் பணம் திரட்ட முடியுமோ அப்படியெல்லாம் சிதம்பரனார் பணம் சேகரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு பல வட நாட்டு வணிகர்கள் பங்குதாரர்கள் ஆனார்கள்.

சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கம்பெனிக்குப் பணம் திரட்டிடச் சென்ற போது, “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் தான் வருவேன். இல்லையென்றால் அங்கேயே கடலில் விழுந்து உயிர் விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு வடநாடு புறப்பட்டுச் சென்றார்.