உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

27

நமது பொது மாதாவாகிய பாராதத்தாயும் - இந்த இரு பெரும் கப்பல்களைப் பெற்றமைக்காக மகிழ்ச்சி பெறுவாள் என்பது உறுதி” என்று அவர் எழுதி, சிதம்பரனாரின் சாதனைகளை பாராட்டினார்.

சுதேசி கப்பலிலேயே இலங்கைக்குப் போகும் பொருள்களை ஏற்றி அனுப்புவதென மக்கள் முடிவு கட்டினர். அதன்படி பொருள்களைக் கப்பலிலேயே ஏற்றுமதி செய்து அனுப்பி வைத்தார்கள்.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் கம்பெனி கப்பல்களில் இலங்கை போகும் பயணிகளும் ஏறவில்லை. கட்டுப்பாடாக எல்லாரும் தமிழர்களின் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தார்கள். வெள்ளைக்காரர்களுடைய கப்பல் கம்பெனி நிர்வாகத்தினர் தங்களது கப்பல்களுக்குரிய பயணக் கட்டணங்களையும் குறைத்துக் கொண்டு, தரகர்களை நியமித்து பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள். சுதேசிக் கம்பெனி மீது சில இல்லாத பொல்லாத பொய்ப் பிரச்சாரங்களையும் செய்தார்கள். ஆனால், சுதேசிக் கம்பெனியார் வெள்ளையர்களின் பித்தலாட்டப் பிரச்சாரங்களை மறுத்துத் தவிடு பொடியாக்கினர். தமிழர்களும் மற்ற பிரயாணிகளும் சுதேசிக் கப்பல்களுக்கே பேராதரவைத் தந்து அவற்றை முன்னேற்றுவித்தார்கள்.

மக்கள் ஆதரவு இல்லாததைக் கண்ட ஆங்கிலேய கப்பல் நிர்வாகம் தனது கட்டணத்தைக் குறைத்தது. அதற்குப் பிறகும் கூட யாரும் கப்பல் பயணம் செய்ய முன் வரவில்லை. ‘கட்டணமே இல்லாமல் இலவசப் பிரயாணம் செய்ய வாருங்கள்’ என்று பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள்.