உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

  ஆனால் நடைமுறை அப்படித் தானிருக்கிறது. சிறுபிள்ளைகள் மரப்பாச்சியையும் ஸெலுலாய்ட் பொம்மையையும் இணைப்பது போல- களிமண் உருளையும் ரப்பர் பொம்மையையும் சேர்த்து வைப்பது போலவே- யுவனுக்கும் யுவதிக்கும் தங்கள் மனம்போன போக்கில் கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள் பெரியோர்கள்.அவர்கள் நோக்கம் வேறாக இருக்கிறது. அதனால் மனித வாழ்வை, சமுதாய நலனை, உயிர்க்குல வளர்ச்சியையே நாசமடிக்கிறார்கள்.
 இன்றைய நிலையிலே கல்யாணம் இன்பலோகத்தின் ஆசாரவாசலாக இல்லை. ஆனந்தப் பூக்காவினுள் செல்ல அனுமதிக்கும் இன்பச்சீட்டாக இல்லை. ஆனால், துயரப் பள்ளத்திலே தலைகுப்புறப் பிடித்துத் தள்ளுவதாக உள்ளது. மேலே பசுமை போர்த்து உள்ளே பயங்கரப் பாழ்மை பதுக்கி மேலே பகட்டாகச் சிரிக்கும் பேழ்வாய் போல் இருக்கிறது. இதனால் ஆணும் பெண்ணும் இஷ்டம் போல் திரிய வகை செய்யும் பாஸ் போர்ட்டாக மிளிர்கிறது கல்யாணம்.
 ஆயினும், இம் மாதிரிக் கல்யாணங்களில் கூட,தப்பித் தவறி இன்பம் கிட்டி விடுகிறது. எதூதனையோ ஜோடிகள் இன்ப வாழ்வு காணவும் முடிகிறது. அவன் யாரோ, அவள் யாரோ என்று 'ஆராரோ ஆரிராரோ' பாட வேண்டிய தன்மையிலே சந்திக்கும் இருவரும் சுமுகமாக, மனோகரமாக வாழ முடிகிற தென்றால் அதற்கு மனநிறைவு தான் காரணம். இவர்களது மனநிறைவு வாழ்வில் குறுக்கிடும் மேடுபள்ளங்களைச் சமன் செய்து விடுகிறது. சிறு குறைகளை கவனிக்கக் தூண்டுவதில்லை. பெருந் தவறுகளைப் பெரிதுபடுத்த விடுவதுமில்லை, மறந்து, மன்னிக்கும் மனப்பண்பை வளர்க்கிறது குண நிறைவு,