இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சகுந்தலா
23
படித்துக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்கிறார் என்று புரிந்தது. மேலோட்டமாகப் பார்த்ததில் அவர் பெயர் ஞானசம்பந்தம் என்று ஊகிக்க முடிந்தது அவனால். புத்தகங்களின் மேலும் காகிதங்களிலும், கைபட்ட இடங்களிலெல்லாம் அப்படிக் கையெழுத்திட்டிருந்தார் அவர்.
தன்னை வரச் சொன்னதையே அவர் மறந்திருப்பாரோ; அல்லது படிப்பிலே ஆழ்ந்து கிடப்பதனால் அங்கு தானிருப்பதையே மறந்து விட்டாரோ என்ற எண்ணம் உண்டாயிற்று அவனுக்கு. அங்கு காத்திருப்பது பொறுமையைச் சோதிப்பதாகத் தோன்றியது. அவன் கண்கள் அங்குமிங்கும் திரிந்தன. அவர் பட்டாசாலையி லிருந்தார். அடுத்த அறைகளுக்குச் செல்லும் வழியின் கதவு அடைத்தே கிடந்தது. ஜன்னல்களும் அழகிய பூந்திரைகளேற்றுத் திகழ்ந்தன.
'இந்த வீட்டிலே நான் நினைத்தது மாதிரி மர்மம் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை இருந்தாலும் இருக்கலாம் சில நிமிஷ நேரத்திலேயே அதை எப்படி நிர்ணயித்து விட முடியும்?' என்று தனக்கே உபதேசித்துக் கொண்டான் ரகுராமன்.
'என்ன, என்ன விஷயம்?' என்று கேட்டார் அவர் கையிலிருந்த புத்தகத்தை மூடிக் கீழே வைத்து விட்டு.
'நீங்கள் தானே வரச் சொன்னீர்கள். விசேஷமாக என்னவோ பேசவேண்டுமென்று.'குற்றம் சாட்டுவது போல் தொனித்தது அவன் பதில்.
ஞானசம்பந்தம் கனைப்பது போல் சிரித்தார். 'ஆமா. பக்கத்திலே பக்கத்திலே குடியிருக்கிறோம்,நாம் ஒருத்தரை ஒருத்தர் இதுவரை பார்த்துப் பேசினது கூட யில்லை!’ என்றார்.
'சந்தர்ப்பம் வரலே.அதுதான்’ என்று ‘ஞஞ்ஞமிஞ்ஞத் தனம்' பயின்றான் அவன்
.
'சந்தர்ப்பமென்ன சந்தர்ப்பம்! நான் சொல்றேன், வர வர மனிதர்கள் பழகும் தன்மையையே இழந்து விட்டார்கள். மனுஷ சுபாவமே மாறி வருகிறது. தான், தனது, தன்னைச் சேர்ந்தவர், தனது வீடுஇதை மாதிரி இன்ட்ரஸ்ட் வளருகிறதே தவிர பிறத்தியாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற துடிப்பு இல்லை. அந்தக்