உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சங்க இலக்கியம்

என்று குறிப்பிடுகின்றது. இப் பாட்டால் தொல்பழங்காலத் தில் பாண்டிய நாட்டில் ஓடியது பஃறுளி ஆறு என்பதும். அதனைத் தோற்றுவித்த நெடியோன் என்பான் பாண்டிய வேந்தருள் மிகத் தொன்மையானவன் என்பதும் தெளிவா கின்றது.

மலிதிரை ஊர்ந்து மண்கடல் வெளவலின்
மெலிவின்று மேற்சென்று மேவார் நாடிடம்படப்
புலியொடு வில்.நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன்

-கலி. 104

என்று தமிழ்ச் சான்றோர் ஒருவர் பாண்டியனின் அருஞ் செயல்களைக் குறிக்கின்றார். பாண்டியனுடைய வீரத்தின் சிறப்பினைக் கூறும் புலவர் கடல் அலைகள் மிகப் பலவாகப் பொங்கி எழுந்து நாட்டினை வெளவியதைக் குறிப்பிட்டுள்ளார்.

இறையனார் களவியல் உரையும் (பக்கம் 6) கடல் கோள் பற்றிய குறிப்பினை நல்குகின்றது. தொல்காப்பியத் திற்கு முதன்முதலில் உரை எழுதிய இளம்பூரணரும், சிலப் பதிகாரத்திற்கு நல்லதொரு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்களும் முச்சங்க வரலாற்றோடு தமிழகத்தில் தென்பகுதி கடல் வாய்ப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளனர். பனம்பாரனார் பாடிய குறுந்தொகைப் பாட்டில்,

ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
கூர சைந் தனையாய் நடுங்கல் கண்டே

-குறுந். 50

என வருவதன் கண் கடல் எழுந்து மிதித்தலால் நீரில் விளங்குகின்ற மலை அசைந்து நடுங்குதல் கண்டு எனக் கூறுவது, இவர் தாம் கண்கூடாகக் கண்ட பெருங்கடல் கோள் நிகழ்ச்சியை உவமைமுகத்தான் கூறினார் என்பது இயைபுடையதாகும். கடல்கோளுக்கு உட்பட்ட அக் குமரி நாடு (அ) லெமூரியா மனித நாகரிகத்தின் தொட்டில் (Craddle of human Race) எனச் சிறப்பிக்கப்படுகிறது.