நீரு பூத்த நெருப்பு
ராமநாதன் சாஸ்திரிக்காக, பால்கனியிலும் படியோரத்திலும், மொட்டை மாடியிலும் ஒவ்வொருவராகவும், இருவருமாகவும் காத்துக் காத்து கண்கள் பூத்ததுபோல், ஆண்டவனும், அகிலாவும் சலிப்போடு வீட்டிற்குள் வந்து, கதவைச் சாத்தினார்கள்.
கால்மணி நேரத்தில் காலிங் பெல்லிற்குப் பதிலாக கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், ராமநாத சாஸ்திரியே... நடன நிகழ்ச்சிக்குத் தயாரானவர்போல், பின்புறம் வேட்டியைத் தார்பாய்த்து, முன்புறம் விசிறிபோல் சுங்கு விட்டு - அதாவது மடிப்பிட்டு, பூணுாலைப் பாதி மறைத்து, மீதியைக் காட்டும் துண்டும், முன்வழுக்கையும், பின்குடுமியுமாய் காட்சியளித்தார். அவரைப் பார்த்ததும், தம்பதியர் பரவசப்பட்டார்கள். பக்கத்து மெயின்ரோட்டில் உள்ள ஏழைப் பிள்ளையாரின் அர்ச்சகர்.' சுபிட்சமாய் இருப்பீங்கோ... ஒஹோன்னு வாழ்வீங்கோ...’ என்று பக்தர்களை உற்சாகப்படுத்துகிறவர். அதேசமயம், யாராவது இடக்கு மடக்காகக் கேட்டால்,' இந்த வேலையெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதிங்கோ... எனக்கு குஸ்தியும் தெரியும்...’ என்று சவால் பாணியில் சொல்கிற மனிதர். தட்டில் விழும் ஒரு பைசாவைக்கூட வீட்டிற்குக் கொண்டு போகாதவர். எவர் வீட்டிற்கும் போகாத அப்பேர்பட்டவர், வாக்களித்ததுபோல் வந்ததில், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு, பிறகு சாஸ்திரியை போட்டி போட்டு உபசரித்தனர்.
“வாங்க சாமி!, நீங்க எங்கே வரமாட்டிங்களோன்னு பயந்து போயிட்டோம்.”
“ஆமாம் சாஸ்திரி ஸார். நீங்க வரமாட்டிங்கன்னு நினைத்து ஆபீஸ் போறதுக்கு ஆயத்தம் ஆனேன். அதுக்குள்ள வந்துட்டிங்க.."