பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 சேர மன்னர் வரலாறு


வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுக்கோட்டைக்கு அண்மையிலோடும் வெள்ளாறு வரையிற் சோழ நாடும், வெள்ளாற்றுக்கும் தென்குமரிக்கும் இடைப்பகுதி பாண்டிய நாடும், மேலைக் கடலுக்கும் மேலை மலைத் தொடருக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி சேர நாடு மாகும் ஆயினும், ஏனைச் சோழ பாண்டிய நாடுகளைப் போலாது தனது மொழியும் பண்பாடும் தொன்மை வரலாறும் இழந்து, முற்றிலும் வேறு நாடாகக் காட்சி யளிக்கும் வகையில், சேர நாடு தமிழ் நலம்குன்றி விட்டமையின், அதன் பண்டைய எல்லை நன்கு ஆராய்ந்தல்லது வரையறுத்துக் கூற முடியாத நிலையில் உளது.

இங்கே பண்டை நாள் என வழங்குவது கடைச்சங்க காலமாகும். அக் காலத்தே சேர நாடு செந்தமிழ் நலம் சிறந்து தமிழ் கூறும் நல்லுலகமாக விளங்கிற்று. சங்ககால நூல்களை நன்கு பயின்றால் அன்றிச் சேர நாட்டின் பண்டைநாளை நிலையினை அறிவது அரிது; அது பற்றியே சோழர்களைப்பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் வரலாற்று நூல்கள் (History) உண்டானது போலச் சேர நாட்டுக்கு வரலாறொன்றும் தோன்றவில்லை. சேர நாடு பிற்காலத்தே கேரள நாடென வழங்கத் தலைப்பட்டது. அதன்பின், கேரளோற்பத்தி, கேரளமான்மியம் என்ற வரலாற்றுப் போலிகள் உண்டாயின. சேர நாடென்பது கேரள நாடானதற்கு முந்திய நிலையாதலால், அதன் தொன்மைநிலை அறிதற்குச் சேர மன்னர்களையும் சேரநாட்டு மக்களையும் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் சான்றாகின்றன.