பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 47



மேனாட்டறிஞர் வங்கவாகதர் சேரபாதர் என்பன வங்கர்களையும் மகதர்களையும் சேரர்களையும் குறிக்குமென்றார். இவற்றை ஆராய்ந்து கண்ட ஆராய்ச்சியாளர், கீத்தென்பார் கூறுவதே இடத்துக்கும் இயைபுக்கும் பொருத்தமாகவுளது என்று எடுத்துரைக்கின்றனர்.[1] இராமாயணத்தில்[2] கீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்கு வழிதுறைகளை வகுத்துரைத்த சுக்கிரீவன் தென்னாட்டு இயல்பு கூறுங்கால் சோழ சேர பாண்டிய நாடுகளைக் குறித்துச் சொல்லுகின்றான். மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசர்[3] கூறுகின்றார். இவ்வாற்றால் வேதகாலத்திலும் இதிகாச காலத்திலும் வட நாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழ பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின்றது.

இப்போது, சேர நாட்டின்கண் அதன் தொன்மை கூறும் வகையில் வரலாற்று நூல்கள் இரண்டு நிலவுகின்றன. அவை கேரள மான்மியம் கேரளோற்பத்தி என்பனவாம். அவற்றுள் மான்மியம் வடமொழியிலும் கேரளோற்பத்தி மலையாள மொழியிலும் உள்ளன. இவை காலத்தில் மிகவும் பிற்பட்டனவாயினும், இன்று இவை நாட்டு வரலாறாகக் கூறப்படுவது பற்றி ஈண்டு ஆராயும் தகுதி பெறுகின்றன. இவற்றுள் கேரளோற் பத்தியை எழுதியவர் துஞ்சத்து இராமாநுசன் எனப்படுகின்றார்.


  1. P.T.S.Iyengar’s History of the Tamils. P. 29, 328;
  2. R.C. Dutt’s Ramayanam ;
  3. வியா, பாரதம்: ii: 34 1271; V. 22: 656.