உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

டால்ஸ்டாய் கதைகள்

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

நாம் ரோட்டை விட்டு விலகிவிட்டோம் என்று தெரிகிறது’ என்றான்.

‘அப்படியானால் வண்டியை நிறுத்துங்கள். நான் தேடிப் பார்க்கிறேன்’ என்று சொல்லி நிகிட்டா வண்டியிலிருந்து மெதுவாகக் கீழே குதித்தான். வைக்கோலுக்குக் கீழே இருந்த சாட்டையை எடுத்துக் கொண்டு அவன் வண்டியில் தானிருந்த பக்கத்துக்கு இடது புறமாக விலகி நடந்தான்.

அந்த வருஷம் பனி ஆழ்ந்து படிந்து விடவில்லை. ஆகவே எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்வது சாத்தியமாக இருந்தது. என்றாலும் சில இடங்களில் முழங்கால் அளவுக்குப் பனி விழுந்து கிடந்தது. அதனால் பனி அவனது பூட்ஸினுள் புகுந்தது. அவன் காலாலும் சாட்டையினாலும் தட்டித் தடவி தரையை உணர்ந்து அங்குமிங்கும் திரிந்து பார்த்தான். பாதை தென்படவே இல்லை.

அவன் வண்டி அருகே திரும்பி வந்ததும், ‘என்ன எப்படி ஆச்சு?’ என்று வாஸிலி கேட்டான்.

‘இந்தப் பக்கத்திலே ரோடு இல்லை. அந்தப் பக்கமாகப் போய் பார்க்கவேண்டும். இதோ நான் போகிறேன்’ என்றான் நிகிட்டா.

‘அதோ அங்கே முன்னால் ஏதோ தெரிகிறதே! அங்கே போய் அது என்னவென்று பார்.’

அங்கே கறுப்பாகத் தோன்றியது என்ன என்று பார்க்க நிகிட்டா போனான். மாரிக் கால ஓட் தானியம் பயிர் செய்யப்பட்டு அறுவடையாகிக் காய்ந்து கிடந்த வயல்களிலிருந்து காற்று அள்ளி வந்து பனியின்மீது சிதறி விட்டிருந்த மண்தான் அப்படித் தெரிந்தது.