இரண்டு பேர்
29
அங்கெல்லாம் மரக்கட்டைகள் அல்லது பயிர்த் தாள்கள் பனியைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்ப்பதையும், அடிக்கடி அவை காற்றில் அசைந்தாடு வதையும் அவர்கள் காண முடிந்தது. சில சமயங்களில், ஆழமாகத் தேங்கி, பரவலாக விரிந்து கிடந்த பனிமீது சென்றார்கள். அந்த இடங்களில் எதுவுமே பார்வையில் பிடிபடவில்லை.
மேலே இருந்து பனி பெய்து கொண்டிருந்தது. வேளா வேளைகளில், கீழே இருந்து கிளம்பி எழுந்தது. குதிரை களைப்பால் ஓய்ந்து போனது நன்கு புலனாயிற்று. அதன் ரோமம் பூராவும் வேர்வையால் சுருண்டு, முரட்டுப் பனியினால் மூடப்பட்டிருந்தது. அது மெதுநடையிலேயே சென்றது. திடீரென அதற்குக் கால் இடறியது. வாறுகாலிலோ அல்லது ஏதோ நீரோடும் காலிலோ அது உட்கார்ந்து விட்டது.
வாஸிலி ஆன்ட்ரீவிச் குதிரையை நிறுத்த விரும்பினான். ஆனால் நிகிட்டா கூச்சலிட்டான்.
‘நிறுத்துவானேன்? நாம் எதனுள்ளோ அகப்பட்டுக் கொண்டோம். வெளியே போயாக வேண்டும். ஹேய், அன்பே! ஏ அரசே! மேலே போ அப்பா, கண்மணியே!’ என்று உற்சாகமான குரலில் குதிரைக்கு உபதேசித்தான் அவன். வண்டியிலிருந்து வேகமாகக் குதித்து அவனும் சாக்கடையில் அகப்பட்டுக் கொண்டான்.
குதிரை முண்டி முயன்றது; முன்னேறியது. உறைந்து போய்க் கிடந்த கரைமீது ஏறிவிட்டது. அந்த இடத்தில் வெட்டி விடப்பட்டிருந்த கழிவு நீரோடைதான் அது என்பது தெளிவாகப் புரிந்தது.