பக்கம்:தமிழ் இனம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ் இனம்

தமிழர் பொருள் இலக்கணத்தை ஆராய்தற்கென்றே மற்றைய இரண்டு இலக்கணங்களையும் கற்று வந்தமை தெரிகின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொருள் இலக்கணம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் கூறுவதாகும். இன்பத்தைப்பற்றி இயம்பும் பகுதி அகப்பொருள்’, ‘அகம் என்னும் பெயர்கள் பெறும். ஏனைய முப்பொருள்களைப் பற்றிக்கூறும் பகுதி புறப் பொருள், புறம் என்னும் பெயர்களைப் பெறும். இவ்விரண்டனுள் அகப்பொருளைப்பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் கருத்தாகும்.

உள்ளதும் இல்லதும்

அகமாவது, ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த கல்வியும், ஒத்த உருவும். ஒத்த திருவும் பொருந்திய ஒருவனும்-ஒருத்தியும் தம்முள் தனிமையிற் கலந்து பின்னர்த் தம்முள் மணந்துகொள்ளுதலைக் கூறுவது. இப்பகுதியால் அக்காலத்திய தமிழர் கையாண்டுவந்த மணமுறையும் இல்வாழ்க்கைத் தத்துவங்களும், பிறவும் நன்கறியலாம். இப்பகுதியில் புனைந்துரைகளும் பல உண்டு. இறையனார் அகப்பொருள் உரை ஆசிரியர், “இஃது...... இல்லது இனியது நல்லது என்று புலவரால் காட்டப்படுவதோர் ஒழுக்கமாதலின், இதனை உலக வழக்கோடு இயையான்,” என்று கூறியுள்ளார். உச்சிமேற்புலவர்கொள் நச்சினர்க்கினியர் என்னும் புலவர் இவர் கொள்கையை மறுத்து, “இஃது இல்லதெனப்படாது உலகியலேயாம். உலகியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/19&oldid=1359194" இலிருந்து மீள்விக்கப்பட்டது