தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
21
தமிழ்ப் பற்று மிகுதியாகக் கொண்டிருந்த அடிகள், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தின் சார்பில், சில நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதிலும் கவனம் செலுத்தினார்கள். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம், திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக் கொத்து, அற்புதத் திருவந்தாதி, ஞானதேசிக மாலை, அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து, கந்தர்சட்டிச் சொற்பொழிவு ஆகியவை அவ்வாறு வெளிவந்த நூல்கள் ஆகும்.
இவற்றில் கந்தர்சட்டிச் சொற்பொழிவு என்பது அடிகள் ஆற்றிய சொற்பொழிவுகள் சிலவற்றின் தொகுப்பு நூல். பேராசிரியர் முத்து. இராசாக் கண்ணனார் குறிப்பெடுத்து எழுதியது.
சிவமணமும் தமிழ் மணமும் நாடெங்கும் பரவிடத் தம் வாழ்வை அர்ப்பணித்து அரும் தொண்டாற்றிய ஞானியாரடிகள் 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் நாளன்று இறைவன் திருவடி சேர்ந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் சைவத்தின் பெருமையையும் பரப்பிச் சிறப்புடன் வாழ்ந்தவர்கள் ஞானியாரடிகள். அவர்களது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் தன்மை உடையது.
(நன்றி : சிவத்திரு ஞானியார் அடிகள் நூற்றாண்டுவிழா வெளியீடான சிவத்திரு ஞானியார் அடிகள் வரலாறு இக்கட்டுரைக்கு ஆதாரமாகும்.)