பக்கம்:தம்பியின் திறமை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

திமிங்கிலத்தின் முதுகில் ஓங்கி ஒரு குத்துவிட்டேன். அது துடித்துச் செத்து விழுந்தது. கொஞ்ச நேரததில் திமிங்கிலம் மிதந்து கடலின்மேல் மட்டத்திற்கு வந்துவிட்டது. தான் அதன் முதுகில் ஏறிக்கொண்டு வந்து கப்பலுக்குச் சென்றேன். அந்த திமிங்கிலத்தையும் கப்பலில் சற்றிக் கொண்டு எல்லோரும் கரைக்கு வந்து சேர்ந்தோம்...” என்று இவ்வாறு சாமிநாதன் சொல்லி முடித்து ஆவலோடு பொற்கொடியைப் பார்த்தான்.

“நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை; அது அப்படியே நடந்த தென்று நான் ‌நம்புகிறேன்” என்று அவள் தயங்காமல் சொல்லிவிட்டாள். சாமிநாதன் ஏமாந்து திரும்பினான்.

இரண்டாவது நாள் சாமிநாதனுக்கு அடுத்த தம்பியாகிய மாணிக்கம் பொற்கொடியிடம் சென்று பேசலானான்.

“எனக்குப் பத்து வயதிருக்கும்போது ஒரு நாள் இரவு முழுநிலா அழகாக வான வெளியிலே பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனக்குச் சந்திரமண்டலத்திற்கு அப்பொழுதே போக வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. உடனே என்னுடைய தொழிற்சாலைக்குப் போனேன். ஒரு நொடியிலே ஒரு புஷ்பக விமானம் செய்தேன். அதில் ஏறிக்கொண்டு ஆகாயத்திலே ஜிவ்வென்று பறந்தேன். அடுத்த நொடியிலே சந்திரனுக்குப் போய்விட்டேன். சந்திரன் இங்கிருந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதே ஒழிய அங்கே சென்று பார்ப்பதற்கு அழகாக இல்லை. அங்கு இருந்த பெண்களும் குரங்குமூஞ்சிப் பெண்களாக இருந்தார்கள். அதனால் அங்கே தங்கியிருக்கப் பிடிக்கவில்லை. உடனே திரும்பலாம் என்று நினைத்தேன். ஆனல் அதற்குள்ளே ஒரு குரங்குப் பெண் என் புஷ்பக விமானத்திலே குரங்கு வேலை செய்துவிட்டாள். நுட்பமான அந்த விமானம் கெட்டுப்போய்விட்டது. அதைப் பழுது பார்ப்பதற்குத் தொழிற்சாலை இல்லை. அதனால் நான் நிலாவின் வெண்மையான கிரணம் ஒன்றைக் கையில் பற்றிக்கொண்டு அதோடு பூமியை நோக்கிக் குதித்தேன். பூமியைச் சுற்றிலும் வானவெளியிலே கருமேகங்கள் நெருக்கமாகப் படர்ந்திருந்தன.