உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

திருமந்திரம்


புரிதல் - செய்தல், பின்னால் - பின்னே. பிறங்க - விளங்க. அவன் சடை என்றும் பின்னே தாழ்ந்து விளங்கும் எனவே அம்முதல்வன் யாரையும் வணங்கியறியான் என்பது குறித்தவாறு. ‘பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை’ (1-80-2) எனவும், ‘தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர்தம்மால் தொழுவிக்கும் தம் தொண்டரையே’ (4-112-5) ‘என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந்தான் ஈசன்’ (திருச்சாழல் - 2) எனவும் வரும் அருளுரைகள் தன்னால் தொழப்படுவாரில்லாத தனிமுதல்வன் தாழ்சடையோனாகிய சிவன் என்னும் மெய்ம்மையை அறிவுறுத்துவனவாகும்.


8. தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. (10)

இறைவன் உலகெலாமாகி நிற்கும் நிலையினை உணர்த்துகின்றது.

(இ-ள்) இறைவனாகிய தான் ஒருவனே பெரிய நிலமுழுவதனையும் தாங்கி (எல்லாப் பொருள்களுக்கும் விரிந்து இடங்கொடுக்கும்) பரந்த ஆகாயமாகிக் கலந்து நிற்கின்றான். தான் ஒருவனே சுடுந்தன்மையுடைய தீயும் (இருள்கடியும் சுடராகிய) கதிரவனும் மதியுமாகிக் கண்ணிற் கலந்து விளங்குகின்றான். தான் ஒருவனே தன்னிற் பிரிவிலாததாய் மழையைப் பொழியும் அருட் சத்தியாய் உலகுயிர்களோடு கலந்து நிற்கின்றான். தான் ஒருவனே பெரிய மலையாகவும் தண்மையதாகிய நீரையுடைய கடலாகவும் கலந்துள்ளான். எ-று.