பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பவத்தைத் தரவில்லை, தம்முள் புகுந்துவிட்டான். அதனாலேயே மனக்கோட்டம் தவிர்ந்தது; உள்ளம் உருகிற்று; ஊன் உருகிற்று. அதுவும் நிலைபேறுடையதாக உருகிற்று என்பதைக் கூறவே ஊனெலாம் நின்று, உருக 'புகுந்து' ஆண்டான் என்கிறார் அடிகளார்.

அவன் புகுந்து இறையனுபவத்தில் முழுவதுமாக அடிகளாரை மூழ்கடித்தான் என்பது உண்மை. அப்படியிருக்க 'இன்றுபோய் வானுளான் காணாய்’ என்று பேசுவதன் நோக்கமென்ன? அவன் புகுந்ததை, புகுந்த பின்னரே, நிறைந்த அனுபவத்தின் விளைவாக இவர் அறிந்தார். அனுபவத்தில் நிறைந்து மூழ்கியிருந்தபொழுது அங்குப் புகுந்தவனும் தனியே இல்லை; அடிகளாரும் தனியே இல்லை; அனுபவம் ஒன்றுமட்டுமே எஞ்சி நின்றது. இந்த அனுபவம் முழுவதுமாக நிறைந்து நிற்பதற்குக் காரணமே அவன் தம்முள் புகுந்ததுதான் என்று அடிகளார் கருதினார்.

இப்பொழுது அனுபவம் வடியத் தொடங்கிவிட்டது. அனுபவத்தில் மூழ்கியிருந்த அடிகளார் அனுபவ வெள்ளத்திலிருந்து வெளிப்பட்டு நிற்கின்றார். புதிய சிந்தனை பிறக்கின்றது. வெள்ளம் ஏன் வடிந்தது? தாம் ஏன் வெளிப்பட்டு நிற்கவேண்டும்? இவை இரண்டும் நிகழக் காரணம் என்ன என்ற எண்ணம் தோன்றியவுடன் அடிகளாருக்கு விடை கிடைக்கின்றது. புகுந்து ஆண்டவன் இப்பொழுது தம்மைவிட்டு வெளிப்பட்டுத் தம்மைத் தனியே விட்டுவிட்டு வானிற் சென்று தங்கிவிட்டான். அதனால்தான் தம் அனுபவம் வடிந்து தாம் வெளிப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது என்று உணர்ந்து பாடுகின்றார்.

'புகுந்து ஆண்டான்’ என்ற தொடர் கொஞ்சம் சிக்கலானது. புகுந்து என்ற வினையெச்சம் ஆண்டான் என்ற வினை கொண்டு முடிந்ததேனும் ஆளுதல் ஆகிய