iii
தொல்காப்பியம் மிகப் பழமையான, ஈடெடுப்பற்ற அரிய இலக்கண - எழுத்தும் சொல்லும் பொருளும் நலத்தக நாடி முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிச் செய்யப்பட்டது. தொல்காப்பியர் என்னுந் தோமில் புலவர் யாத்தது; எழுத்ததிகாரம் சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளையும் ஒவ்வோரதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களையும் கொண்டு கூடுதல் 1610 நூற்பாக்களுடன் மிளிர்வது என்று பொதுவாகக் கருதப்படுவது; இற்றைக்கு ஏறத்தாழ 2300 யாண்டுகட்கு முற்பட்டது.
இதன் நூற்பாத் தொகையை உரையாசிரியர்கள் வெவ்வேறு விதமாகக் கொண்டுள்ளனர். அதன் விவரம் இந்தப் பதிப்பின் பிற்சேர்க்கை 4இல் தரப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தின் இயல் வரிசைகள், நூற்பாத் தொகை ஆகியவற்றைக் கூறும் சில பழம் பாடல்கள் வழக்கில் உள்ளன. அவை பிற்சேர்க்கை 2இல் தரப்பெற்றுள்ளன.
அண்மையில் வாழ்ந்தவராகிய மகாகவி பாரதியாரின் பாடல்களிலேயே பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன என்பர். அங்ஙனமாயின் மிகப் பழங்காலத்திற் றோனன்றியனவும், மிகப் பலரால் மிகப் பலமுறை படியெடுத்துப் படிககப் பெற்றனவுமாகிய நூல்களில் பாடவேறுபாடுகள் காணப்படுவது இயல்பே. தொல்காப்பியம் தோன்றிய காலத்திலேயே அதற்குப் பல படிகள் தோன்றியிருக்கக் கூடும். அவற்றை நோக்கித் தமிழகம் எங்கணும் பல படிகளை எழுதியும் எழுதுவித்தும் தமிழ் மாணவர் கற்றிருப்பர். இங்ஙணம் வழிப்படிகள் பல்கப் பல்கப் பாடவேறுபாடுகள் தோன்றலாயின எனலாம்.
எஸ். எம். கத்ரே அவர்கள் இந்திய மூலபாடத் திறனாய்வு - ஒர் அறிமுகம் (S.M.Katre - Introduction to Indian Textual Criticism) என்னும் அரிய ஆய்வு நூலைப் படைத்துள்ளார். அதில் ஒரு நூலாசிரியர் எழுதிய அல்லது எழுதுவித்த மூலப்படி (Original autograph) ஒன்று இருக்கும் என்றும், அதனடிப்படையில் பல படிகள் தோன்றுமென்றும், இவ்வாறு உண்டான மாற்றுப்படிகளின் அடிப்படையில் காலந்தோறும் பல்வேறிடங்களில் வழிப்படிகள் பற்பல வகையில் அமையும் என்றும் கூறியுள்ளார்.
பாடவேறுபாடுகள் தோன்றக் காரணங்கள் பலவாம். வழிப்படிகளைப் படியெடுக்குங்கால் எழுதுபவர் பிறழ உணர்ந்து தவறு படலாம்; தம் அறிவாற்றல்களின் குறைவு நிறைவுகட்கேற்ப மூல பாடத்தினின்று சிறிது வேறுபட்டு எழுதலாம் மிகப் பழைய ஏடாயின் பொடிந்துபோன பகுதிகளை