உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 31

படித்திருந்தாள். என்ன செய்வது? அவள் அழகைப் படித்துக் காட்டிய கண்ணாடி ‘மக்குப் பிளாஸ்திரி’யாக இருந்தது.

இருந்தாலும் பரவாயில்லை, அவளுக்குப் பரிசு அந்த இளைஞன் கண்களில் மின்னிடும் புத்தொளியில் கிடைத்துவிடும். அதற்காக அவள், அவன் வராந்தாவில் இருக்கும் சமயங்களில், வேலை எதுவும் இல்லாத போதும் வேலைகள் இருப்பதுபோல் அப்படியும் இப்படியும் நடப்பதையும் குதித்து ஓடுவதையும் மேற் கொண்டாள். அவள் மனம் இன்பச் சிறகுகள் கட்டிப் பறந்தன.

அவள் உற்சாகத்துக்கு ஊக்கம் ஊட்டுவதில் வசந்தா ஆர்வம் காட்டினாள். அவள் வீடு கொஞ்சம் தள்ளியிருந்தது. தோழிக்காகத் தான் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவள் சொன்னாள்.

இப்போதும் அப்படி ஒரு சேதியோடுதான் அவள் வந்திருந்தாள்.

“என்னது, சொல்லேன்?”

“அவர் பேர் என்ன தெரியுமா, காஞ்சனா?”

“நான் என்ன கண்டேன்?”

“சந்தர். ஆமாம், சந்....தர்”

“உனக்கு எப்படித் தெரிஞ்சது?”

“அந்த வீட்டிலே ஒரு பெரியம்மா இருக்காங்க, அவங்களை ஃபிரண்ட் பிடிச்சேன்...”

“நீ அந்த வீட்டுக்குப் போனியா?”

“ஆமா, போனா என்ன?”