தோழி நல்ல தோழிதான்★41
அதாவது வேண்டுமென்றே செய்யப்படாத தன்னினைவற்றுத் தானே நிகழ்ந்துவிடுகிற திரை நீக்கங்களை, விதம் விதமான பெண்களிடம் பார்த்து இன்புறும் பாக்கியம் இரவு நேர ரயிலில் தூங்காது விழித்திருக்கும் வீணனுக்கு வந்து சேர்கிறதே என்று அவன் எண்ணிக் கொண்டான்.
அவன் பார்வை எதிர் பெஞ்சு மீது படிந்தது. கண்களை பிடித்திழுத்து அங்கேயே நின்று விடும்படி செய்யும் தோற்றம்தான்.
நீலப்பட்டு உடுத்திய உருவம். எடுப்பான பருவத் திரட்சிகளையும் பிடிப்புக்களையும், நெளிவு வளைவுகளையும் பெற்றிருந்த பெண். மினுமினுக்கும் வெண்மை என்றும் சொல்ல முடியாத, மஞ்சள் என்றும் கொள்ள முடியாத, ஆயினும் தாழம்பூ நிறம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என் நினைக்க வைக்கும் நிறத்தைக் கொண்டிருந்த யுவதி படுத்துக் கிடந்த ஒடுங்கல் தோற்றம் அவனைக் கிறக்கியது. அவள் திரும்பிப்படுத்த கோலமும், முன்புற அழகு காட்டிய நிலையும், ஆழ்துயில் பயின்ற எழில் முகத்து அமைதிக் கொலுவும் காணுந்தோறும் காணுந்தோறும், மீண்டும் மீண்டும் காணவேண்டும் எனும் ஆசையைத் துண்டும் அற்புத இனிமைகளாகத் திகழ்ந்தன.
சிதம்பரம் மற்றவர்களையும் கவனித்தான்.
அந்தக் குடும்பத்தின் இளம்பெண் அழகியுமல்ல, அலங்காரியுமல்ல; குரூபியுமல்ல; கோரமும் இல்லை. கண்டு சகிக்கக்கூடிய சராசரிப் பெண். தூங்கும் நிலையில் அவளிடம் ஒரு வசீகரம் சூழ்ந்திருந்தது. சிதம்பரம் இருந்த பெஞ்சில்தான் அவள் தூங்கிக் கிடந்தாள்.
எதிர்ப்பெஞ்சில் துயில் புரிந்த அழகி, தலைமாட்டில் கணவனும், கால்பக்கம் எவளோ ஒருத்தியும் இருக்க,