உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 13 பட்டுள்ளது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; முழுதும் மலைகளையே கொண்டதோ, முழுதும் காடுகளையே கொண்டதோ ஆகாது, சிறுமலையும் குறுங்காடும் கலந்த நிலப் பகுதி பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். தமிழகத்து நிலங்கள், இவ்வாறு ஐவகையாகப் பகுக்கப் பெறுமெனினும், அவற்றுள் குறிஞ்சி நிலமே முதன் முதலில் தோன்றிய நிலப் பகுதியாகும்; கல் தோன்றிய பின்னரே மண் தோன்றும் என்பது நில இயல்பாகும். "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்” என்ற பழந்தமிழ்ச் செய்யுட் சான்றினையும் காண்க. நிலங்களுள் குறிஞ்சி நிலமே முதற்கண் தோன்றிய நிலமாதற் கேற்ப, மக்கள் தங்கள் வாழ்க்கையை முதன் முதலில் தொடங்கிய இடமும் அக்குறிஞ்சி நிலமே ஆகும். மக்களின் உடலை வளர்த்து உயிர் ஒம்பவல்ல உணவுப் பொருள்களை அம்மக்களின் உழைப்பினை எதிர் நோக்காமலே அளிக்கக் கூடிய ஆற்றல் அம்மலை நிலம் ஒன்றிற்கே உண்டு. ஆகவே, உழைப்பின் திறம் அறியாத் தொல்லூழிக் காலத்து மக்கள் தம் முயற்சி சிறிதும் வேண்டாதே, தமக்கு வேண்டும் உணவினைக், காயாகவும், கனியாகவும், கிழங்காகவும் அளித்த அம்மலை நாட்டகத்தே தம் வாழ்வின் இடம் கண்டு இன்புற்றார்கள். காயும், கனியும், கிழங்குமாகிய மரவுணவுப் பொருள்களும், மக்கள் விரும்பி உண்ணும் உணவாகப் பயன்படும் மாவினங்களும், மக்கள் தம் முயற்சி ஒரு சிறிதும் வேண்டாதே, அம்மலையகத்தில் எங்கும் எக்காலத்தும் கிடைத்து வந்தமையால், நாளைக்கு வேண்டும் என ஈட்டி வைக்கும் தனியுடைமைப்பொருள் நிலை, மக்களுக்குக்