உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

குயிற் பாட்டு

பேசு மிடைப் பொருளின் பின்னே மதிபோக்கிக்
கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான்;
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்;
காரைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்; 30
தங்க முருக்கித் தழல் கறைத்துத் தேனாக்கி;
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி 35
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்,
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்;
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். 45
துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!

7. குயிலும் மாடும்

காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே
சோலைக்(கு) இழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்;
கோலப் பறவைகளின் கூட்டமெலாங் காணவில்லை;
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளியினிலே 5
நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல்
கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; 10