சு. சமுத்திரம் 35
அந்தக் கூட்டுச் செயற்குழு பெண்கள், ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமலே, அத்தனை பேரும் இயங்கினார்கள். இரண்டு மணி நேரத்தில் எல்லாமே தயார். டயர் சக்கர வண்டி மேல் தார்ப்பாய் போடப்பட்டு, அது மேடையானது. அதற்குமேல் எழுந்த தென்னை ஒலை பந்தலின் அடிவாரத்தில், சலவைத் தொழிலாளி அருணாசலம், அழகழகான சேலைகளை நீள வாக்கில் கட்டிவிட்டார். எவளெல்லாம் அவருக்குப் பிடிக்காதோ, அவள்களுடைய சேலைகள், இப்போது பந்தல் அம்மணத்தை மறைத்தன. ராமசுப்புவின் செளக்குக் கட்டைகளில், ராமசுப்புவின் குலைவாழைகள் கட்டப்பட்டன. உள்ளுர் மேளக்காரர்கள் கூப்பிடாமலேயே வந்து விட்டார்கள்.
வாடாப்பூ, கலைவாணிக்கும், ஆனந்திக்கும் மத்தியில் நின்றாள். மீரா, பலராமன் போகும் இடமெல்லாம் போக்கு காட்டி நடந்தாள். பக்கத்தில் உள்ள பனந்தோப்பில், சுண்ணாம்பு கலக்காத பதநீரைக் குடித்துவிட்டு, லேசாய் தடுமாறுவது போல் வந்த 'லாரிக்கார' மாரியப்பன், 'இங்க என்னடி ஒனக்கு வேலை' என்று வாடாப்பூ தலைமுடியை பிடிக்கப் போனான்... கலைவாணி கர்ஜித்தாள்.
"வாடாப்பூவ. தொடு பார்க்கலாம்”
கனகம்மாள் மிரட்டினாள்.
"தொட்டால்.. கை துண்டா விழும். ஒன்னத்தான் மாரியப்பன்! இனிமேல் அவள எப்போவாவது, நீ அடித்தால், அது எங்கள அடித்தது மாதிரி. ஒன்னை மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி... கழுதையிலே ஏத்திடுவோம்; பொட்டப் பயல்தான் பொம்புளைய அடிப்பான்".
கலைவாணியும், சீனம்மாவும் மிரட்டிய மிரட்டலில், கண்களை உருட்டிப் பார்த்த மாரியப்பன், அப்படியே குன்றி நின்றான். தடுமாறாத போதை... தன்னை மறக்காத போதை... வாடாப்பூவை முறைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை... என்ன கொடுமை இது?
மாரியப்பன் போனதும், வாடாப்பூ, கலைவாணியின் கையையும், தேனம்மாவின் தோளையும் பிடித்துக் கொண்டு விம்மினாள். உள்ளே அழுது இப்போது வெளிப்படையாகவும் அழுதாள். கலைவாணி ஆறுதல் சொன்னாள். 'சரி எப்போவாவது அடித்தா முன்னால், நாங்க இருக்கோம். சாத்து சாத்துன்னு சாத்திடுவோம். இப்போ பல கிராமங்களில் பெண்கள் இயக்கம் பெண்டாட்டிய அடிக்கிற பயல்களை உண்டு இல்லன்னு ஆக்குது'.