உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலைப்புறா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 பாலைப்புறா

டாக்டர் சந்திரா, இருக்கையில் எழுந்து, மனம் கனக்க, அங்குமிங்குமாய் சுற்றினாள். அவன் அழைப்பிதழை சரி பார்த்து, மோட்டார் பைக்கில் ஏறி, கோணச்சத்திரம் பிரதான சாலையில் ஒடி, ரயில் நிலையப் பாதைக்குத் திரும்பி, வடக்குப் பக்க மண்சாலையில் தாவி, சுடுகாட்டுக்குப் பக்கமாய் உள்ள, இந்த சுகாதாரநிலைய வளாகத்திற்குள் வருவதை, சின்னச்சின்ன கால அவகாசத்துடன் கணக்குப் போட்டாள். அவள் தலைக்குள் அந்த மோட்டார் பைக், சுடுகாட்டை நெருங்குவதுபோல ஒடியது.

கிளிப்பச்சை சேலையும், வெள்ளைக் கோட்டுமாக, வீணைக்குப் பதிலாக ஸ்டெதாஸ்கோப் பிடித்த சரஸ்வதி தேவிபோல் தோன்றிய சந்திரா, கடிகாரத்தை, படபடப்பாய் பார்த்தாள், இந்த இன்சார்ஜ் டாக்டர். முஸ்தபா, அசல் முசுடு, லீவ் லட்டரை எழுதி வைத்துவிட்டு, எங்காவது தொலைந்து போகும். போய்விட்டு, திரும்பி வந்ததும், அந்த லீவு லட்டரைக் கிழித்துப் போடும். போகும் போது மட்டுமே பல்லை இளிக்கும். மற்ற சமயங்களில், பல்லைக் கடிக்கும் ஆசாமி. எழுதுவதே கிழிப்பதற்கு என்பது மாதிரி, ஒரு விடுமுறை விண்ணப்பத்தை, இன்றைய தேதியோடு நேற்றே எழுதி வைத்துவிட்டது. இன்று காலையிலே இவளை டூட்டிக்கு வரச் சொன்னது. இவ்வளவுக்கும், இவளுக்கு இன்று ‘ஆப்’. ஆனாலும் அதுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இவள்தான் மெட்ராஸ் அத்தான் சங்கரன் வரப் போவதைக் கணக்கில் வைத்து 'காலையில் லேட்டாகும் பத்து மணி வரைக்குமாவது இருங்க டாக்டர்’ என்று சொல்லிவிட்டாள். இப்போதே பத்தே கால். இப்போது இவளும் அவசரமாய் போய், மனோகரும், இங்கே வந்துவிட்டு, கல்யாண அவசரத்தில் ஊருக்குப் போய்விட்டால், ஒரேடியாய்க் கதை முடிந்திடும்... அம்மாவிடம் சொல்லி, அவரை சுகாதார நிலையத்திற்கும் வரச்சொல்லமுடியாது. தனித்துப் பேசவேண்டிய விவகாரம். இந்நேரம் இந்த முஸ்தபா, நோயாளிகளுக்கு வலிக்கும் படியாக ஊசி போடும். என்ன சுகாதார நிலையமோ, ஆரம்பக்கட்டத்திலேயே நிற்கிறது.

டாக்டர் சந்திரா, எந்த நேரத்தில் தற்காலிகமாக அந்த மனோகரை மறந்தாளோ, அந்த நேரத்தில் மோட்டார் பைக் சத்தம். டாக்டர் முஸ்தபா மீதுள்ள எரிச்சலையும் மறந்தவளாய் வெளிக் கதவைத் திறந்தாள்... மனோகர்தான்.

“வணக்கம் டாக்டர்".

"அங்கேயே வணக்கம் போட்டுட்டமே... உள்ளே வாங்க”.

டாக்டர் சந்திரா, ‘வருகிறாரா’ என்பது போல் திரும்பத் திரும்பப் பார்த்து விட்டு, அவனை உள்ளறைக்குள் கூட்டிப் போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/50&oldid=1405006" இலிருந்து மீள்விக்கப்பட்டது