சிலர் வைரங்கள் என்று கட்டிக் காட்டியவற்றை விட, என் மன நிலைக்கியைந்த கூழாங்கற்கைளயே நான் விரும்பி சேகரித்து வந்திருக்கிறேன். அவரவர் கூழாங்கற்கள் அவரவர் வைரங்கள்; இதற்காக என் கூழாங்கற்களை, அசுத்தம் தோய்ந்தவை என்று தப்புக் கணக்கு போட்டு விடக் கூடாது. அவை, தொடர்ந்து ஓடும் வாழ்க்கை ஆற்றின் இடையறாத சலனத்தால், மென்மையும், தூய்மையும் அடைந்தவை.
நாம் படிக்கக் கிடைக்கிற எல்லா எழுத்தாளரையும், நேரிலும் அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்ட முடியாது. அப்படி அறிய நேர்ந்த சிலரில், சமுத்திரமும் ஒருவர். நேரில் அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அதே இயல்புகள், அவரது எழுத்திலும் அப்படியே காணக் கிடைக்கின்றன. உரத்துப் பேசுவது போலவே, எதையும் உரத்துச் சொல்வது அவரது இயல்பு. சபை நாகரீகம் கருதி, பலரும் பேச்சில் தவிர்ப்பதை, குறிப்பாக மட்டுமே சொல்ல முற்படுவதை எல்லாம், அப்பட்டமாகப் போட்டு உடைப்பது சமுத்திரத்தின் பேச்சு பாணி மட்டுமல்ல; எழுத்து பாணியும் கூட. சமூக அவலங்கள் பற்றிய எரிச்சலையும், கோபத்தையும், சமயத்தில் ஆற்றாமையையும் வெளிப்படுத்த இந்த சிதறு தேங்காய் பாணி சமுத்திரத்துக்கு எப்போதும் கை கொடுத்து வந்திருக்கிறது. எனினும், மென்மையான உணர்வுகளில் சஞ்சரிக்க வேண்டிய தருணங்களிலும், சமுத்திரத்தின் எழுத்து இளநீரை நினைவு படுத்துவதை விட, காயின் மேல் விழுகிற வீச்சரிவாள் வெட்டையே நினைவு படுத்த முற்படுவதைப் பார்க்கலாம்.
பாலைப்புறா நாவல், சமுத்திரத்தின் அணுகு முறையில் வெளி வரும் மற்றொரு படைப்பு. நானறிந்த அளவில், எய்ட்ஸ் தொடர்பான முதல் தொடர்கதை இதுதான். எய்ட்ஸ், இன்று நமது சமூகத்தில், அரசாங்கத்தாலும், தனியார் அமைப்புகளாலும் பெரும் பணச் செலவில் மக்களிடையே பரப்பப்படுகிற ஒரு செய்தியாக விளங்குகிறது. நோய் பற்றிய ஆய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் செலவிடப் படுவதை விட, அதிகத் தொகை, விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேககம் எழும் அளவுக்கு இந்தப் பிரச்சாரம் நடக்கிறது.
கள விளம்பரத் துறை அதிகாரி என்ற முறையில், நண்பர் சமுத்திரம், எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை, முகாம்களை, பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ஈடுபடவேண்டியிருந்தது. தனியாரும், அரசும் கூட்டாக செய்து வரும் விளம்பரங்களைப் பற்றி விமர்சிக்கும் வாய்ப்பை அப்போது அவர் எனக்குக்
v