உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3 நிறைந்திருந்தன. ஆகையாலும், அந்த ஆடைகள் இலேசாக இருந்தமையாலும், ஒட்டியாணம், வங்கி முதலியவற்றின் உதவியாலும், அவளது உடம் போடு உடம்பாக ஒட்டிக் கொண்டிருந்தமையாலும், அவளது அங்கத்தின் அமைப்பும் உயர்வு தாழ்வுகளும், கரவுசரிவுகளும் அப்படியப் படியே எடுப்பாக வெளியில் தெரிந்தன. ஆகவே, அவள் அணிந்திருந்த அற்புத ஆடைகள் அவளது மேனியை மறைப்பதை விட்டு அதன் சிறப்புகளையெல்லாம் நன்றாக வெளியிட்டு விளம்பரப்படுத்துவனபோல் இருந்தன. அவளது ஒவ்வோர் அங்கமும் ஒவ்வோர் அலங்காரமும் காண்போரினது மனதில் ஆயிரம் மோகன அஸ்திரங்களைச் சொரிந்து அவர்கள் மீளா விதத்தில் விரகநோய் கொண்டு அவளை நினைத்து நைந்து உருகித் தவிக்கும்படி செய்தன. அதோடு, அவள் காட்டிய நாணமும், மடமும், கண், புருவம் அதரம் முதலியவற்றின் விஷமங்களும், இதர லாகலங்களும் ஒன்று கூடி, அவளைப் படைத்த கடவுளையும் ஒருநொடியில் வெல்லக் கூடிய அபார மனமோகன சக்தியாக விளங்கின. ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெல்லத்தக்க மோகன அவதாரமோ எனத் தோன்றிய அம்மாளு என்ற கட்டழகி தாம்பூலம் அணிந்து பழுத்துச் சிவந்து நைந்து இருந்த தனது அதரங்களை மலர்த்திப் புன்னகை செய்தவண்ணம் கலியாணசுந்தரம் இருந்த விடுதிக்குள் நுழைந்து, நிரம் பவும் வசீகரமாக நாணிக் கோணி பயமும், பக்தியும், பணிவும் தோன்ற வந்து நிற்கவே, அதைக்கண்ட நமது கலியாணசுந்தரத்திற்கு ஒரே நொடியில் உண்மை விளங்கி விட்டது. ஈசுவரனால் அளிக்கப்பட்ட அவ்வளவு அருமையான சிறப்புகளையும் கட்டழகையும் அந்தப்பெண் நல்ல வழியில் பயன்படுத்தாமல் தனது கற்பை இழந்து வெட்கத்தை விட்டு அப்படிப்பட்ட இழிசெயலில் இறங்குகிறாளே என்ற வேதனையும் அருவருப்பும் கொண்ட கலியாணசுந்தரம் தனது மனநிலைமையை வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு