உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையும் பயிர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை ரவி

அப்படிச் செய்தார். அப்போது அவர் மனசிலிருந்து ஏதோ பெரிய பாரம் குறைந்ததுபோல் இருந்தது.

விஷயம் மன்னிக்குத் தெரிந்தது. ரவியை வைதாள். அதை அவர் பெரிதாக எண்ணவில்லை. அந்த வசவு அன்றோடு போயிற்று. ஆனால் சிறைப்பட்ட அணில்பிள்ளைகளோ விடுதலை யடைந்து ஆனந்தமாகத் துள்ளிக் குதித்தன. அதைப் பார்த்துப் பார்த்து அவர் இன்பம் அடைந்தார். சின்ன வயசிலேயே ரவீந்திரர் சொந்தமாகக் கவிதை பாடினார். அவருக்கு ஒரு நாள் வேடிக்கையாக ஓர் எண்ணம் உண்டாயிற்று. தோட்டக்காரன் வர்ண வர்ணமான மலர்களைப் பறித்து வந்து பூக் கிண்ணங்களில் வைப்பான். கண்ணைப் பறிக்கும் அழகுள்ள பூக்கள் மென்மையான மலர்கள். இந்த மலர்களைப் பிழிந்து அந்தச் சாற்றிலே பேனாவைத் தோய்த்துக் கவிதை எழுதினால் மிகவும் நன்றாக இருக்குமே!’ என்ற எண்ணம் ரவிக்குத் தோன் றிற்று. பூக்களை எடுத்தார்; கசக்கிப் பிழிந்தார். அதிலிருந்து ஒரு துளிகூடச் சாறு கிடைக்கவில்லை. பிழிவதற்கு ஏதாவது யந்திரம் ஒன்றைச் செய்தால் என்ன என்று மற்றோர் யோசனை உண் டாயிற்று. அவருடைய அண்ணாவிடம் சொன்னார். இந்தப் பைத்தி யக்கார யோசனையைக் கேட்ட அவருக்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் குழந்தையின் ஆசையைக் கெடுக்கக் கூடாதென்று, ஒரு தச்சனைக் கூப்பிட்டார். மரத்தால், உரல் ஒன்றைப் பண்ணிக் கொடுக்கச் சொன்னார். ஒரு குழவியும் பண்ணச் சொன்னார்.

தச்சனிடம் அந்த இரண்டையும் பெற்ற ரவி தம் காரியத்தை ஆரம்பித்தார். பூவையெல்லாம் உரலில் கொட்டினார். குழவியினால் அரைத்தார். அப்போதும் மலரிலிருந்து ரஸம் கிடைக்கவில்லை அவருக்கே சலித்துப் போயிற்று. 'இப்படியெல்லாம் அரைத்தால் மலரில் சாறு வராது' என்று தெரிந்துகொண்டார்.

ரவி மலரின் சாற்றிலே தோய்த்துக் கவிதை எழுதவில்லை. ஆனால் அவர் எழுதின கவிதைகள் தேனிலே தோய்த்து எழுதியவை போல இனிமையாக இருக்கும். சின்ன வயசிலேயே அவருக்குக் கற் பனையும் கவிபாடும் சக்தியும் இருந்தன.

அவரும் உங்களைப் போலக் குழந்தையாக இருந்தார், வேடிக்கை விளையாட்டெல்லாம் விளையாடினார் என்பதை நினைக் கும்போது, உங்களுக்கு ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா?

29