பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிர்களைப் பற்றியும் உபநிடதங்கள் சாத்திரங்கள் கூறும் கருத்துக்களைத் தெளிந்து கவிஞர் விளக்கியுள்ள திறம் சிந்தித்தற்குரியது. தத்துவச் சாரச் செய்திகளைத் தொகுத்து விளக்கியுள்ளார். நான் என்னும் தன்முனைப்பை அடக்கி நலம்பெற வேண்டும் எனவும் அழியுமுடலைக் கொண்டு அழிவற்ற புகழைத் தேடவேண்டும் எனவும் உயிர் ஊக்கச் செயல்களைக் கவிஞர் உலகுக்களித்துள்ளார். வாழ்வுக்குறுதி பயக்கும் நல்லொழுக்கமும் நற்செயல்களும் நல்சிந்தனைகளும் மனிதகுலம் முழுமையும் ஏற்றுப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாங்கில் இந்நூல் அமையக் காணலாம்.

இவரது பாடல்களில் சித்தர்களின் சிந்தனைகளும் இடையிடையே விரவிக் காணப்படுகின்றன.

          அன்றே அறிஞர் அறிவித்தார் அக்னிகள்
          ஒன்றாயுடலின்மூன்றுண்டெனவே - ஒன்றால்
          உணவு செரித்தல் உயிர் காத்த லொன்றால்
          குணம் கூட்டவொன்றால் குறித்து.

இப்பாடலில் சித்தர்களின் கருத்து உட்புதைந்துள்ளமையை உணரலாம். ஆன்றோர் தங்களது வாழ்வில் கண்டு தெளிந்ததை இலக்கியமாகவும், வாழ்விலக்கணமாகவும் வகுத்தும் தொகுத்தும் பல்வேறு வடிவங்களில் விட்டுச் சென்றுள்ளனர்.அவற்றைக் கற்றோர் கற்றுணர்ந்தோர் கலைத்திற்கேற்ப மீண்டும் வழங்க வேண்டுதல் சமுதாயக் கடப்பாடாகக் கொள்ளலாம். அவ்வகையில் கவிஞர் வெள்ளியங்காட்டான், திருக்குறட் கருத்துக்களையும் உரிய இடங்களில் இணைத்துள்ளார்.

26