உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
வானதூதர் துணைநிற்க, நைல் நதியில் மிதந்துவரும் குழந்தை மோசே (விப 1:8-22; 2:1-4). விவிலிய வரைவு ஓவியம். கலைஞர்: குஸ்தாவ் டொரே (1832-1883).


விடுதலைப் பயணம் (The Book of Exodus) [1]

[தொகு]
நூலுக்கு முன்னுரை


ஒடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை 'விடுதலைப் பயணம்' என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இஸ்ரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.


நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இஸ்ரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல்

அ) எகிப்தில் அடிமைத்தனம்
ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும்
இ) மோசேயின் அழைப்பு
ஈ) மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல்
உ) பாஸ்கா - எகிப்தினின்று வெளியேறல்

1:1 - 15:21

1:1-22
2:1-25
3:1 - 4:31
5:1 - 11:10
12:1 - 15:21

84 - 108

84 - 85
85 - 86
86 - 89
89 - 100
100 - 108

2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27 108 - 113
3. பத்துக் கட்டளைகள் - உடன்படிக்கை நூல் 19:1 - 24:18 113 - 122
4. உடன்படிக்கைக் கூடாரம் - வழிபாட்டு ஒழுங்குமுறைகள் 25:1 - 40-38 122 - 151

விடுதலைப் பயணம் (The Book of Exodus)

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

எகிப்தில் இஸ்ரயேலரின் அடிமை வாழ்க்கை

[தொகு]


1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற
இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை:
2 ரூபன், சிமியோன், லேவி, யூதா;
3 இசக்கார், செபுலோன், பென்யமின்;
4 தாண், நப்தலி, காத்து, ஆசேர். [1]
5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும்
மொத்தம் எழுபது பேர். [2]
யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தார்.
6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும்
அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.
7 இஸ்ரயேல் மக்களோ
குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்;
ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்;
இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது. [3]


8 இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத
புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். [4]
9 அவன் தன் குடிமக்களை நோக்கி,
"இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப்
பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
10 அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு
தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள்.
ஏனெனில் போர் ஏற்படுமாயின்,
அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்;
நம்மை எதிர்த்துப் போரிடுவர்;
இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்" என்று கூறினான். [5]
11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக
அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர்.
பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு
ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ,
அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர்.
இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
13 எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்;
14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும்,
அனைத்து வயல்வெளி வேலையாலும்,
மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும்,
அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.


15 எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா
என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:
16 "எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது
நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்;
ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்;
பெண்மகவு என்றால் வாழட்டும்".
17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால்
எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை.
மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து
அவர்களை நோக்கி, 'ஏன் இப்படிச் செய்து,
ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?' என்று கேட்டான்.
19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி,
"எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்;
ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்;
மருத்துவப்பெண் வருமுன்னரே
அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது" என்று காரணம் கூறினர்.


20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார்.
இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார்.
அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.
21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால்,
அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து,
"பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும்
நைல் நதியில் எறிந்து விடுங்கள்.
பெண்மகவையோ வாழவிடுங்கள்" என்று அறிவித்தான்.


குறிப்புகள்

[1] 1:1-4 = தொநூ 46:8-27.
[2] 1:5 ஒரு பழைய மொழிபெயர்ப்பில் 'எழுபத்தைந்து' எனக் காணப்படுகிறது (காண். திப 7:14).
[3] 1:7 = திப 7:17.
[4] 1:8 = திப 7:18.
[5] 1:10 = திப 7:19.


அதிகாரம் 2

[தொகு]

மோசேயின் பிறப்பு

[தொகு]


1 இவ்வாறிருக்க,
லேவி குலத்தவர் ஒருவர்
லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.
2 அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்;
அது அழகாயிருந்தது என்று கண்டாள்;
மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். [1]
3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால்,
அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து
அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்;
குழந்தையை அதனுள் வைத்து
நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.
4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக்
குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.


5 அப்போது பார்வோனின் மகள்
நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள்.
அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர்.
அவள் நாணலிடையே பேழையைக் கண்டு
தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்;
அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்;
அது அழுதுகொண்டிருந்தது.
6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்.
"இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று" என்றாள் அவள்.
உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
7 "உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க,
எபிரேயச் செவிலி ஒருத்தியை
நான் சென்று அழைத்து வரட்டுமா?" என்று கேட்டாள்.
8 பார்வோனின் மகள் அவளை நோக்கி,
"சரி. சென்று வா" என்றாள்.
அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9 பார்வோனின் மகள் அவளை நோக்கி,
"இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல்.
எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு.
உனக்குக் கூலி கொடுப்பேன்" என்றாள்.
எனவே குழந்தையை எடுத்துச் சென்று
அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.
10 குழந்தை வளர்ந்தபின்
அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள்.
அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள்.
'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி
அவள் அவனுக்கு 'மோசே' [2] என்று பெயரிட்டாள். [3]

மோசே மிதியானுக்குத் தப்பியோடல்

[தொகு]


11 அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது
தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்;
அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்;
மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை
எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்; [4]
12 சுற்றுமுற்றும் பார்த்து,
யாருமே இல்லையெனக் கண்டு,
அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
13 அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது,
எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்;
குற்றவாளியை நோக்கி "உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டார்.
14 அதற்கு அவன், "எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும்
நடுவனாகவும் நியமித்தவன் எவன்?
எகிப்தியனைக் கொன்றதுபோல்
என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?" என்று சொன்னான்.
இதனால் மோசே அச்சமுற்றார்;
"நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே" என்று சொல்லிக் கொண்டார்! [5]
15 இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது
மோசேயைக் கொல்லத் தேடினான். [6]

எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி,
மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
16 அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க,
மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து,
தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத்
தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.
17 அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர்.
உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார்.
அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.
18 அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது
அவர், "என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?" என்றார்.
19 அவர்கள், "எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து
எங்களை விடுவித்ததோடு,
எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்;
ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்" என்றார்கள்.
20 அவர் தம் புதல்வியரிடம்,
"எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்?
சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
21 அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க,
அவரும் மோசேக்குத் தம் மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.
22 அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.
'நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்'
என்று கூறி மோசே அவனைக் 'கேர்சோம்' [7] என்று பெயரிட்டழைத்தார்.


23 இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான்.
இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர்.
அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு
கடவுளை நோக்கி எழும்பிற்று.
24 அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார்.
ஆபிரகாமுடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த
உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். [8]
25 கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார்.
அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார்.


குறிப்புகள்

[1] 2:2 = திப 7:20; எபி 11:23.
[2] 2:10 எபிரேயத்தில், 'எடுக்கப்பட்டவன்' என்பது பொருள்.
[3] 2:10 = திப 7:21.
[4] 2:11 = எபி 11:24.
[5] 2:11-14 = திப 7:23-28.
[6] 2:15 = திப 7:29; எபி 11:27.
[7] 2:22 எபிரேயத்தில், 'அன்னியன்' என்பது பொருள்.
[8] 2:24 = தொநூ 15:13-14.


(தொடர்ச்சி):விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை