பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

227


கேள்வியைக் கேட்டால், பதிலாக ஒரு பெருமூச்சுதான் வருகிறது” என்று அண்ணா தனது ஏக்கத்தை வெளிப் படுத்தினார். இணைய வேண்டும் என்பது அவரது நோக்கம் என்பதைத்தானே அந்தப் பெருமூச்சு உணர்த்தியது.

உலக முழுதும் தெரிந்துள்ள Prodigal son என்ற கதை கூடத், தந்தையிடமிருந்து பிரிந்து சென்ற மகனொருவன் சீர்கெட்டு, வறுமையில் வாடி, வாழ வழியின்றி மீண்டும் தந்தையை நாடித் திரும்பியவனைத், தந்தை அரவணைத்து ஏற்றார் என்பதுதானே! ஆனால், இங்கு நடந்தது என்ன? பிரிந்து சென்ற மகன் ஆட்சியைக் கைப்பற்றி, முதலமைச்ச ராகவும் ஆனபின்னர், தந்தையைக் காணத் தானே சென்ற செய்தி வரலாற்றில் கிடையாதே! கேட்டதுண்டா? கண்டதுண்டா?

திருச்சியிலிருந்த தந்தை பெரியாரைக் காணவேண்டும் என்று விரும்பிய அண்ணா, தம்முடன் நாவலர், கலைஞர், ஆகிய இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு திடுமெனப் புறப்பட்டுத் திருச்சி சென்று அன்பிலையும் அழைத்துக் கொண்டு அய்யாவைச் சந்தித்தாரே இரா. செழியன் போன்றோர் தடுத்தும் கேளாமல!

இந்தச் சமயத்தில் நான் சென்னையிலோ, திருச்சியிலோ இல்லை. ஆனால் அய்யாவைச் சந்தித்துத் திரும்பியவுடன், அண்ணாவை வீட்டில் பார்த்தபோது, “என்னண்ணா! அய்யாவை விட்டுப் பிரிஞ்சப்ப ஊரையே கூட்டிகிட்டு வந்திங்க, ஒங்களோட! இப்ப திரும்பப்போயி அவரோட சேரும்போது, தனியே போயிட்டீங்களே?” என்று கேட்டேன். என்னைத் தம் அருகில் அழைத்துக், காதோடு, “கல்யாணந்தாய்யா எல்லாருக்கும் எதிரிலே நடக்கும். அடுத்தது?” என்றார். குபிரென்று சிரித்தேன். இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.