பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாவி இங்கே; பெட்டி அங்கே!


1947 ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியாரும், மகிழ்ச்சி நாள் என்று அண்ணாவும் அறிவித்துக் கருத்து வேறுபாட்டினை வெளிப்படையாகக் காட்டியதன் விளைவாக அண்ணா 1948 மே 8, 9 நாட்களில் நடைபெற்ற துரத்துக்குடி மாநாட்டுக்குச் செல்லவில்லை. மேலும், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற பிரச்சினைக்குரிய உருவகக் கட்டுரைகளைத் “திராவிட நாடு” இதழில் தீட்டி வருகிறார். இதையே சாக்காகக் கொண்டு, ஏற்கனவே எரிச்சலடைந்துள்ள பெரியாரிடம், மேலும் கோள் மூட்டிச், சுத்தமாக அண்ணாவைப் பெரியாரிடமிருந்து பிரித்துவிடலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அண்ணாவோ “நான் விலகவில்லை; ஒதுங்கியிருக்கிறேன்” என்றுதான் சொல்கிறார். எனவே ஒதுங்கி நிற்காமல் மீண்டும் எப்போதும் போல் அண்ணா உள்ளேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் சிலர் விரும்பினோம்.

‘நாங்கள்’ என்ற பட்டியலில் பெரிய பிரமுகர்கள் யாருமில்லை. ‘நாங்கள்’ பெரியாரின் அன்புக்கும் நம்பிக்கைகும் உரியவர்கள். ‘நாங்கள்’ சொல்வதை அய்யா ஏற்பார். அதனால், ஈரோட்டில் ஒருஸ்பெஷல் மாநாடு கூட்டி, அதற்கு அண்ணாவைத் தலைமை தாங்கச் செய்யலாம்,என்ற எங்கள் யோசனையை, அய்யா ஒத்துக்கொண்டார்கள். அதன்படி 1948 அக்டோபர் 23,24 தேதிகளில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷனிலுள்ள அய்யாவுக்குச் சொந்தமான திடலில், பந்தல் போட்டு மாநாடு நடத்திடத் திட்டம். ஈரோடு சண்முகவேலாயுதம், தவமணி இராசன், நான் ஆகிய ‘நாங்கள்’ எங்கள் முயற்சியில் வெற்றி பெற்றோம்!