பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அதிகமான் நெடுமான் அஞ்சி

இருக்கிறதே! அவன் நெடுந்தூரத்தில் இருந்து, நம்மால் அவனை அடைந்து எதிர்க்க முடியாது என்று முடிந்தாலும், அதற்குப் பொருள் உண்டு. இங்கே நம் முன் அருகில்தான் இருக்கிறான். ஆனாலும் அவனை நம்மால் அணுக முடியவில்லை. அவன் பல ஆண்டுகளாகத் தன் கோட்டையில் இருந்துகொண்டே இருப்பான் போல் இருக்கிறது. இதுவீரமா? கோட்டையின் வலிமையினால் தன் கோழைத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறான். அது கிடக்கட்டும். இத்தனை காலமாக அவனும் அவன் வீரர்களும் உண்ணும் சோறு அங்கேயே கிடைக்கிறதா? அல்லது மண்ணைத் தின்று பசியைப் போக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்களோ!”

சேரமான் பேச்சில் அச்சம், கோபம், இழிவு, பெருமிதம் எல்லாம் குரல் கொடுத்தன. அருகில் அமர்ந்திருந்தவர்கள் வாய் திறக்கவே இல்லை. அவர்கள் பேசுவதற்குப் புதியதாக என்ன இருக்கிறது? காரி முகம் சோர்ந்து உட்கார்ந்திருந்தான். அவன்தானே இந்த முற்றுகைக்குக் காரணம்? ஏதோ குற்றம் செய்தவனைப் போல அவன் தலையைக் குனிந்து கொண்டிருந்தான்.

“என்ன, நீர் ஒன்றும் பேசாமல் இருக்கிறீரே?”என்று சேரமான் கேட்டான்.

“என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் விடிகிறது; முடிகிறது. நாமும் எழுகிறோம்; இன்று ஏதாவது நமக்கு வாய்ப்பாக நடக்காதா என்று எதிர்பார்க்கிறோம்; இரவிலே உறங்கப் போகிறோம். இந்த அவல வாழ்வைக் கண்டு எனக்கே உள்ளம் குமைகிறது. இதற்கு நான் தானே காரணம் என்ற எண்ணம் வேறு இப்போது என் நெஞ்சை உறுத்துகிறது.”-காரி மனம் உளைந்து பேசினான்.

சேரனுக்கு உணர்வு வந்தது. மலையமான் உள்ளத்தில் சோர்வு புகுந்தால் பிறகு ஊருக்குத் திரும்ப