பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அதிகமான் நெடுமான் அஞ்சி

உயிர் துறந்தான். தலை அற்ற பிறகு வால் துடிக்கும்; சிறிது நேரம் துடித்து ஓய்ந்துவிடும். அதிகமான் படையும் அப்படித்தான் வீராவேசத்தோடு எதிர்த்து ஓய்ந்தது. எஞ்சியவர்கள் சரணடைந்தார்கள். பாண்டியனும் சோழனும் பெற்றோம் பிழைத்தோமென்று தம் தம் நகரை நோக்கி ஓடிவிட்டார்கள்.

இங்கே போர்க்களத்தில் பட்டத்து யானைக்கு அருகில் அதிகமான் வீழ்ந்து கிடந்தான். அவனைச் சுற்றித் துயரே வடிவாகப் பலர் இருந்தனர். பெருஞ்சேரல் இரும்பொறை அங்கு வந்து பார்த்தான். வெற்றியேந்திய தடந்தோளும் வீரம் விரிந்த திருமார்பும் முறுவல் கோணா மலர் முகமும் முழந்தாளளவும் நீண்ட கைகளும் அசையாமல் கிடந்தன. அதிகமான் திருமேனியைக் கண்ட கண்களில் நீர் துளித்தது. "எவ்வளவு பெரிய வீரன்! என்ற வியப்புணர்ச்சி அவன் உள்ளே கிணுகிணுத்தது. உரிமை மாதர் புலம்பினர். வீரர்கள் கண் பொத்தி வாய் புதைத்து ஊதுலைக் கனல் போல் உயிர்த்தனர்.

புலவர்கள் வந்து பார்த்தார்கள். ஔவையார் ஓடிவந்தார். “அந்தோ! என் தம்பி! என்னைத் தமக்கையென்று வாயாரச் சொல்லி மகிழும் உன் அன்புச் சொல்லை இனி நான் எப்போது கேட்பேன்! உண்டால் நீண்டநாள் வாழலாமென்பது தெரிந்தும் உனக்கு அந்த வாழ்வு வேண்டாமென்று நெல்லிக்கனியை என்னிடம் அளித்த உன் திருக்கையை யாரிடம் இனிப் பார்க்கப்போகிறேன். பிறந்த ஊரையும் பார்த்த ஊரையும் பழகிய நாட்டையும் மறந்து, உன்னோடே வாழ்நாள் முழுவதும் இங்கே இருந்துவிடலாம் என்றல்லவோ எண்ணியிருந்தேன்? அந்த எண்ணத்தில் மண் விழுந்ததே!” என்று புலம்பினர்.

சேரமானுக்கு வேண்டியவரும் அவனைப் பல பாடல்களால்புகழ்ந்தவருமாகியஅரிசில்கிழார்வந்தார்.