பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதக் கனி

23

என்று இரங்கினர் சிலர். “இது அதிசயக் கனியாக இருக்கிறதே!” என்று ஔவை சொன்னதும் அங்கிருந்த முதியவர் ஒருவர், “ஆம், அதிசயக் கனிதான். அரசர் உண்ணுவதற்காகப் பாதுகாத்த கனி. இதை உண்டவர்கள் நரை திரை மூப்பின்றி நீடுழி வாழ்வார்கள்” என்று கூறினார். அவர் பேச்சில் சிறிது சினமும் அடங்கி ஒலித்தது.

“என்ன! நரை திரை மூப்பை நீக்குவதா?”

“ஆம்; கஞ்ச மலையில் உள்ள அருமையான மரத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த அற்புதக் கனி உண்டாகும். இந்த முறை இந்த ஒன்று தான் கிடைத்தது. இதை மன்னர்பிரான் உண்ண வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டோம். ஆனால்-”

“அடடா! நான் குறுக்கே வந்தேனோ? என்ன காரியம் செய்து விட்டேன்!” என்று வருந்தினார் ஔவையார்.

“எல்லாம் இறைவன் திருவருள். அதை உண்ணும் தவம் உங்களிடந்தான் இருக்கிறது” என்று அதிகமான் சொல்லிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்து, “நீ உண்டால் நீடூழி வாழ்ந்து நாட்டிலுள்ள மக்களுக்கெல்லாம் நலம் செய்வாய்; நான் உண்டு பயன் என்ன?” என்றார்.

“எங்களைப் போன்ற மன்னர்கள் உண்டு வாழ்வதனால் உலகத்திற்கு ஒன்றும் பெரிய நன்மை உண்டாகப் போவதில்லை. போர்தான் விளையும். அரசர்களுக்குப் பிறர் நாடு கொள்வதும், அதற்காகப் போர் செய்வதும், அதன் பொருட்டுப் படைகளைத் தொகுப்பதுமே வேலை ஆகிவிட்டன. நான் என் அநுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன். எத்தனையோ முறை போர் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டுப் புலவர்களைப் புறக்கணித்திருக்கிறேன்.”