பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


நல்ல முறையான பழக்க வழக்கத்தாலும், ஒழுக்கத்தாலும் வலிமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியாலும் மனமு வந்து மேற்கொள்ளும் பயிற்சிகளாலுமே வலிமையைப் பெற முடியும். இந்த முறைகள் விளையாட்டின் மூலமே கிடைக்கிறது.

ஒரு நாணயத்திற்கு இரண்டு புறமும் தெளிவாக இருந்தால்தான் காட்சிக்கு அழகு. அது மக்களிடையே செல்லுபடியாகும். ஒரு புறம் தேய்ந்த நாணயம் ஒதுக்கப் படுவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களே!

அது போலவே, மனித வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் மிக முக்கியம். வலிமையான உடல்- வலிமையான மனம்.

விளையாட்டில் ஈடுபடும் உடலுக்கு வலிமை, திறமை, நீடித்துழைக்கும் ஆற்றல். அழகு மற்றும் ஆற்றல் எல்லாமே கிடைக்கிறது.

இதனால் நோயற்று வாழும் தன்மை நீடிக்கிறது. நிமிர்ந்து நிற்க, நிமிர்ந்து நடக்க, நிமிர்ந்து உட்கார என்பன போன்ற உடல் தோரணை (Posture) அமைகிறது. களைப்பில்லாமல் அன்றாட வாழ்வினைத் தொடரவும், சிறப்பாக வாழவும் செய்கிறது.

2. திறமைகள் -தெளிவும் தேர்ச்சியும் பெறுகின்றன.

முயற்சிகள், தோல்விகள், பலசிக்கலான போராட்டங்கள், அதனால் ஏற்படும் சோதனைகளின் கூட்டுக் கலவைதான் வாழ்க்கையாகும். தோல்விகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் பெறுவதுதான் வெற்றியாகும். எப்படி?

ஏற்படும் தோல்விகள், அவைகள் தரும் அனுபவங்கள் அறிவை மட்டும் தீட்டவில்லை. அதனுடன் உடலால் செய்யும் செயல்களில் தெளிவையும் தேர்ச்சியையும் ஊட்டுகின்றன.

ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை செயல்கள் திற்றல், நடத்தல், ஓடுதல், குதித்தல், தள்ளுதல், இழுத்தல்.